ஜார்க்கண்ட் வேட்பாளர் பட்டியல்; வெளியிட்டது காங்கிரஸ்
புதுடில்லி; ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு டில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. இந் நிலையில், தேர்தலில் போட்டியிடும் 21 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நடு இரவில் (அக்.22) காங்கிரஸ் வெளியிட்டு இருக்கிறது.வேட்பாளர்கள் பட்டியலில் ஜார்க்கண்ட் நிதி அமைச்சர் ராமேஸ்வர் ஓரான் இடம்பெற்றுள்ளார். அவர் லோஹர்தாகா தொகுதியில் களம் காண்கிறார். கட்சியின் மூத்த தலைவரும், திரிபுரா, ஒடிசா, நாகலாந்து மாநில பொறுப்பாளருமான அஜோய் குமார் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.சிப்லி நேஹா திர்கே மந்தர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இவரின் தந்தை பண்டு திர்கே, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் தலைவராக உள்ளார். சட்டசபை தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து 70 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எஞ்சிய 11 தொகுதிகள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் போட்டியிடுகின்றன.