ஜின்னா - காங்கிரஸ் பிரிவினை குற்றவாளிகள்: என்.சி.இ.ஆர்.டி., பாட புத்தகத்தில் சர்ச்சை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரிவினை கொடுமையின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டுள்ள சிறப்பு தொகுதியில், நாட்டின் பிரிவினைக்கு முஹமது அலி ஜின்னா, காங்கிரஸ் மற்றும் அப்போதைய வைஸ்ராய் மவுன்ட்பேட்டன் ஆகியோர் காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பிரிக்கப்பட்ட போது, நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாகவும், தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகவும், மத்திய அரசு சார்பில் ஆக., 14, பிரிவினை கொடுமையின் நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சிறப்பு தொகுதிகளை வெளியிட்டுள்ளது. மூன்று காரணங்கள் 'பிரிவினையின் குற்றவாளிகள்' என்ற பெயரில், 6 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு தொகுதியும், 9 - பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு ஒரு தொகுதியும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியப் பிரிவினை என்பது தவறான கருத்துக்களால் ஏற்பட்டது. இந்திய முஸ்லிம்களின் கட்சியான முஸ்லிம் லீக், 1940ல் லாகூரில் ஒரு மாநாட்டை நடத்தியது. அதன் தலைவர் முஹமது அலி ஜின்னா, 'ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு வெவ்வேறு மத தத்துவங்கள், சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் இலக்கியங்களைச் சேர்ந்தவர்கள்' என்று கூறினார். இறுதியில், 1947 ஆக., 15ல் இந்தியா பிரிக்கப்பட்டது. ஆனால், இது எந்த ஒரு தனிநபராலும் செய்யப்படவில்லை. இதற்கு மூன்று காரணங்களே காரணம். முதலில் முஹமது அலி ஜின்னா அதை கோரினார். இரண்டாவதாக, காங்கிரஸ் அதை ஏற்றுக்கொண்டது. மூன்றாவதாக அப்போதைய வைஸ்ராய் மவுன்ட் பேட்டன் அதை செயல்படுத்தினார். இதன் வாயிலாக, பெரிய குற்றத்தை மவுன்ட்பேட்டன் செய்தார். அதிகார மாற்றத்துக்கான தேதி 1948, ஜூனில் செயல்படுத்தலாம் என்ற முறையையும் அவர் மாற்றி, 1947 ஆக.,ல் அதை நிறைவேற்றினார். கவனக்குறைவு இதனால், பிரிவினைக்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முழுமையாக செய்ய முடியவில்லை. எல்லைகளை நிர்ணயிப்பது அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டது. பஞ்சாபில், 1947, ஆக., 15க்கு பின் அடுத்த இரண்டு நாட்களாக, லட்சக்கணக்கான மக்களுக்கு தாங்கள் இந்தியாவில் இருக்கிறோமா, பாகிஸ்தானில் இருக்கிறோமா என்றே தெரியவில்லை. அவ்வளவு அவசரமாக எல்லைகள் பிரிக்கப்பட்டன. இது, மிகப்பெரிய கவனக்குறைவான செயல். நாட்டின் முதல் துணைப் பிரதமராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல், 'இந்தியா ஒரு போர்க்களமாக மாறியது; உள்நாட்டு போரைவிட, நாட்டை பிரிப்பது நல்லது' என, தெரிவித்தார். பிரிவினையை எதிர்த்த மஹாத்மா காந்தியால் அதை தடுக்க முடியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.