உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 தொகுதிகள் வழங்காவிட்டால் போட்டியில்லை ஜிதன் ராம் மஞ்சியால் தே.ஜ., கூட்டணியில் சலசலப்பு

15 தொகுதிகள் வழங்காவிட்டால் போட்டியில்லை ஜிதன் ராம் மஞ்சியால் தே.ஜ., கூட்டணியில் சலசலப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''பீஹார் சட்டசபை தேர்தலில், எங்களுக்கு 15 தொகுதிகளை தே.ஜ., கூட்டணி ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்,'' என, மத்திய அமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அவமானம் நவ., 6ல், 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், நவ., 11ல், மீதமுள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இவற்றில் பதிவாகும் ஓட்டுகள், நவ., 14ல் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் பா.ஜ., கூட்டணியிலும், எதிர்க்கட்சியான காங்., கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுகள் வேகமெடுத்துள்ளன. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., தலா 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், சிராக் பஸ்வானுக்கு 24; ஜிதன் ராம் மஞ்சிக்கு 10; உபேந்திர குஷ்வாகாவுக்கு ஆறு தொகுதிகளும் ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாட்னாவில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தே.ஜ., கூட்டணியில் அவமானப்படுத்தப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம். ஓர் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற எங்களுக்கு நல்ல எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும். 15 தொகுதிகளை தே.ஜ., கூட்டணி வழங்கும் என, எதிர்பார்க்கிறோம். சமாதானம் கிடைக்கவில்லை என்றால், சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டோம். எனினும், தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம்; ஆதரவு அளிப்போம். எனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, மத்திய அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான நட்டா, ஜிதன் ராம் மஞ்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், ஜிதன் ராம் மஞ்சியின் இந்த கோரிக்கை கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி