கோர்ட்டை அவமதித்தவர்களுக்கு நுாதன தண்டனை வழங்கிய நீதிபதி
புதுடில்லி:டில்லியில், கோர்ட்டின் நேரத்தை வீணடித்த நான்கு பேருக்கு, கோர்ட்டை அவமதித்ததாக கூறி, நாள் முழுதும் கைகளை துாக்கியபடி நிற்கச் சொல்லி, நீதிபதி தண்டனை வழங்கினார். டில்லியில் நடந்த ஒரு குற்றச்சம்பவத்தில் குல்தீப், ராகேஷ், உப்சன்னா, ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமின் கோரி, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதி சவுரவ் கோயல் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும், நான்கு பேரின் தரப்பில் ஜாமின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நீதிபதி இது குறித்து இரண்டு முறை நினைவூட்டியும் ஆவணங்களை தாக்கல் செய்யாமல், நான்கு பேரும் நேரத்தை வீணடித்தனர். இதையடுத்து, 'கோர்ட்டின் நேரத்தை வீணடித்தது, கோர்ட்டை அவமதித்த குற்றமாக கருதப்படுகிறது. இதனால், இந்த நான்கு பேரும், ஒரு நாள் முழுதும் கைகளை மேலே துாக்கியபடி நிற்க வேண்டும்' என, தீர்ப்பளித்த நீதிபதி, ஜாமின் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.