பள்ளி சிறுமியை மிரட்டி பணம் கறந்த மாணவர் போக்சோ வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவு
புதுடில்லி:பள்ளி சிறுமியை மிரட்டி, அவரின் அந்தரங்க படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி, பணம் கறந்த நபருக்கு, 'ஒரு மாதம் மருத்துவமனையில் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்' என உத்தரவிட்ட டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, அந்த சிறுமியை மிரட்டியவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.கடந்த 2017ல், டில்லியை சேர்ந்த ஒரு பள்ளி சிறுமியுடன், அதே பள்ளியில் உயர் வகுப்பில் படிக்கும் இன்னொரு ஆண் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. சமூக வலைதளத்தில் இருவரும், தங்களின் அந்தரங்க போட்டோக்களை பரிமாறி கொண்டனர். அதை வைத்து, அந்த சிறுமியை மிரட்டிய அந்த மாணவர், அவ்வப்போது அந்த சிறுமியிடம் பணம் கறந்தும் வந்தார்.அதன் பின், அந்த மாணவரின் நண்பரும், அந்த சிறுமியை மிரட்டி, பணம் கறந்தார். அதன் பிறகு தான், இந்த விவகாரம் குறித்து, 2019ல் போலீசில் அந்த சிறுமி புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து, அந்த மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நருலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வேண்டுகோளை ஏற்று, அவரை மிரட்டிய மாணவரை, ஒரு மாதம் மருத்துவமனையில் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்; ராணுவ வீரர் நல வாரியத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:சமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ளும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களின் தொழில்நுட்ப முன்னேற்றம், தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் கருத்து படி, இந்த விவகாரத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வர இந்த நீதிமன்றம் விரும்புகிறது.ஏனெனில், குற்றம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், வழக்கு தொடர்ந்து நீடிப்பதை அந்த சிறுமி விரும்பவில்லை. திருமணம், கல்வி போன்றவை பாதிக்கப்படும் என அந்த சிறுமி நினைக்கிறார்.வழக்கமாக இதுபோன்ற குற்றங்களை புரியும் ஆண்களுக்கு, பல ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுவது தான் வழக்கம். அதுபோன்ற தண்டனையால், அந்த மாணவரின் அடையாளம் வெளிப்படும்; அவரின் தனித்தன்மை அம்பலமாகும். அந்த அசிங்கத்திலிருந்து வெளி வர அந்த மாணவரும் விரும்புகிறார்.அவர் செய்த குற்றம், மன்னிக்க முடியாதது தான் என்ற போதிலும், அவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இந்த கோர்ட் ரத்து செய்கிறது.அதற்கு பதில், அந்த மாணவர், டில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனையில் ஒரு மாதம், சமூக சேவையில் ஈடுபட வேண்டும். 'ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், முழு மனதுடன் இந்த செயலில் அவர் ஈடுபட்டார்' என்பதை, மருத்துவமனை அதிகாரிகள், ஒரு மாதத்திற்கு பின் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.மேலும், போரின் போது காயமடையும் ராணுவ வீரர்கள் நல வாரியத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவர் செலுத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டார்.