தர்ஷன் ஜாமின் மனு 14ல் தீர்ப்பு
பெங்களூரு: ''கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் ஜாமின் மனு மீது, வரும் 14ம் தேதி தீர்ப்பு கூறப்படும்,'' என்று, நீதிபதி ஜெய்சங்கர் தெரிவித்தார்.சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33 கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் உள்ளார். ஜாமின் கேட்டு பெங்களூரு 57வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில், தர்ஷன் தரப்பில், மூத்த வக்கீல் நாகேஷ் மனு செய்தார். நீதிபதி ஜெய்சங்கர் விசாரிக்கிறார். விசாரணையின் போது, அரசு சார்பில் ஆஜராகும் வக்கீல் பிரசன்னகுமார், ஜாமின் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.'ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனை வேண்டும் என்றே, போலீசார் சிக்க வைத்து உள்ளனர். அவர் மீது பதிவான வழக்குகள் புனையப்பட்ட கதை. கொலை நடந்த இடம், தர்ஷன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், குழப்பம் நடந்து உள்ளது' என்று, நாகேஷ் குற்றச்சாட்டு கூறினார்.இதை மறுத்த பிரசன்னகுமார், தர்ஷனுக்கு கொலையில் உள்ள தொடர்பை எடுத்து கூறினார். நேற்று மனு மீது, இறுதி கட்ட விசாரணை நடந்தது. இருதரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். வரும் 14ம் தேதி, மனு மீது தீர்ப்பு கூறுவதாக, நீதிபதி ஜெய்சங்கர் கூறினார். அன்றைய தினம் தர்ஷனுக்கு ஜெயிலா, பெயிலா என்று தெரிந்து விடும்.