கர்நாடக காங்., தலைவர் சிவகுமார் மாற்றம்?
கலபுரகி: 'காங்கிரசில் கட்சி தலைவர் மாற்றம் குறித்த அறிவிப்புகள் அடுத்த சில நாட்களில் வெளியாகும்' என, அகில இந்திய காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கலபுரகியில் அளித்த பேட்டி:ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றி உள்ளோம். மீதமுள்ள மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் தலைவர் பதவியில் மாற்றம் நிகழும். தற்போது, இவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாது.ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் கட்சியில் பல மாற்றங்களை செய்கிறோம். மேலும், அடுத்த சில நாட்களில் மற்ற மாநிலங்களிலும் கட்சியின் உள்கட்டமைப்புகளில் இன்னும் சில மாற்றங்களை ஏற்படுத்த உள்ளோம். இந்த அனைத்து மாற்றங்களும் அடுத்த எட்டு நாட்களுக்குள் நிகழும்.நான், கர்நாடகாவை சேர்ந்தவன். இதனால் தான், என்னை கர்நாடகா காங்கிரசில் உள்ள பல முக்கிய தலைவர்கள் பார்க்க வருகின்றனர். சதீஷ் ஜார்கிஹோளி, பரமேஸ்வர் போன்றவர்கள் நட்பின் அடிப்படையிலே சந்தித்தனர். எனவே, இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்.மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தன் நண்பர் என அழைத்துக் கொள்கிறார். ஆனால், அவரோ இந்தியர்களை சரக்கு விமானத்தில் அனுப்பி வைக்கிறார்.அவர் மோடியை நண்பராக நினைத்து இருந்தால் பயணியர் விமானத்திலோ அல்லது நம்மிடம் இருந்தோ விமானத்தை வரவழைத்து அனுப்பி இருக்கலாமே.பிரதமர் மோடிக்கு பொய் சொல்ல ரொம்ப பிடிக்கும். அமெரிக்க அரசு, அமெரிக்காவில் தங்கி இருக்கும் இந்தியர்கள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடக காங்கிரசில், மாநில தலைவர் பதவிக்கான போட்டி அதிகரித்து உள்ளது. இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவின் இப்பேச்சு துணை முதல்வரும், கட்சி தலைவருமான சிவகுமாருக்கும், அவரது தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, முதல்வர் பதவிக்காக தவித்து வரும் சிவகுமாரின் கட்சி தலைவர் பதவியும் பறிபோனால் அவரது நிலை என்ன ஆகும் என அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் உள்ளனர்.