| ADDED : டிச 12, 2025 01:03 PM
பெங்களூரு: மேகதாது திட்டத்தை அமல்படுத்த 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகம், கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே, பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் மேகதாது பகுதியில் அணை கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது.அணை கட்டினால், தங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு, சட்டப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் தன் முடிவில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது.மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்க தயாரிக்க கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் கருத்தை கேட்க உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (டிச.,12) மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை செய்வதற்காக, 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த குழுவில், அரசின் வெவ்வேறு துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை செய்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.