உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷன் வெடி விபத்து: 9 பேர் பலி

காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷன் வெடி விபத்து: 9 பேர் பலி

ஸ்ரீநகர்: டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, 360 கிலோ வெடி பொருள், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மாதிரியை சேகரிக்கும் பணியின் போது திடீரென வெடித்து சிதறியதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 32 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், தற்செயலாக நடந்ததும் என்றும் போலீஸ் உயரதிகாரிகள் விளக்கம் அளித்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில், ஜம்மு - காஷ்மீரின் பன் போரா, நவ்காம் உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்பு படையினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. பறிமுதல் 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆரிப் நிசார் தார், யாசிர் -உல் -அஷ்ரப், மக்சூத் அகமது தார், இர்பான் அகமது ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, ஹரியானாவின் பரிதாபாதில் செயல்படும் அல் பலாஹ் பல்கலை பேராசிரியரும், டாக்டருமான முஸாம்மில் கனி, அவரது தோழியான டாக்டர் ஷாஹீன் சயீத் ஆகியோர், கடந்த 10ல் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து மொத்தம், 3,000 கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அன்றைய தினம் மாலை, தலைநகர் டில்லியில் உயர் பாதுகாப்புள்ள செங்கோட்டை பகுதியில், போக்குவரத்து சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியதில், 13 பேர் உயிரிழந்தனர்; 27 பேர் காயமடைந்தனர். காரை ஓட்டியவர் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பதும், இச்சம்பவத்தில் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. மேலும், பரிதாபாதில் கைதான டாக்டர் முஸாம்மில், அவரது கூட்டாளி என்பதும் தெரிய வந்தது. இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, எட்டுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். அதிரடி சோதனை பரிதாபாதில் டாக்டர் முஸாம்மில் தங்கியிருந்த வாடகை வீட்டில் அதி ரடி சோதனை நடத்திய ஜம்மு - காஷ்மீர் போலீசார், 360 கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். 'அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட், சல்பர்' உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த வெடி பொருட்கள் அனைத்தும், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், திறந்த வெளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தீக்கிரை கடந்த சில நாட்களாக வெடி பொருட்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணி நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில், தடயவியல் நிபுணர்கள், போலீசார் உள்ளிட் டோர் வெடி பொருட்களின் மாதிரிகளை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடி பொருட்கள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் தடயவியல் நிபுணர்கள் மூன்று பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்; 32 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கோர விபத்தில் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தும்படி ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல் அல்ல! பரிதாபாதில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள், நவ்காம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மாதிரிகளை சேகரிக்கும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் இரவு வெடி பொருட்கள் வெடித்து சிதறின. இந்த சம்பவம் தற்செயலானது; பயங்கரவாத தாக்குதல் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. நலின் பிரபாத் ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., எம்.பி.பி.எஸ்., மாணவர் கைது டில்லி குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையினர், ஹரியானாவின் ஜனிசூர் ஆலம் எனும் நிசார் ஆலமை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் -பலாஹ் பல்கலையில் எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். அவரது, 'மொபைல் போன் டவர்' இருப்பிடத்தை கண்காணித்து கைது செய்தனர். ஆலமிடம் இருந்த டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்காக அவர் சிலிகுரிக்கு கொண்டு செல்லப்பட்டார். என்.ஐ.ஏ.,வின் குற்றச்சாட்டை, ஆலமின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அறுவை சிகிச்சை நிபுணரிடம் விசாரணை டில்லி குண்டுவெடிப்பு வழக்கில், பஞ்சாபின் பதான்கோட்டைச் சேர்ந்த 45 வயது அறுவை சிகிச்சை நிபுணரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இவர், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல்- பலாஹ் பல்கலையில் பணியாற்றி உள்ளார். இதே பல்கலையைச் சேர்ந்த ஒரு மருத்துவ மாணவர் மற்றும் முன்னாள் மாணவரை, என்.ஐ.ஏ.,வினர் ஏற்கனவே கைது செய்தனர். காஷ்மீரில், 2,900 கிலோ வெடிபொருள் பதுக்கிய பயங்கரவாத டாக்டர்கள் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். டில்லியில் வெடித்த காரில் டி.ஏ.டி.பி., கலவை டில்லி செங்கோட்டை அருகே வெடித்த, 'ஹுண்டாய் ஐ20' காரில், 'அமோனியம் நைட்ரேட்' உடன் டி.ஏ.டி.பி., எனப்படும், 'டிரைஅசிடோன் டிரைபெராக்சைட்' எனும் சக்தி வாய்ந்த வேதிப்பொருள் கலந்திருந்ததை தடயவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இது, ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் பெல்ஜியமில் 2015 - 16ல் நடந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டது. வெப்பம், உராய்வு, அதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் கூட எளிதில் வெடிக்க கூடியது. பிற வெடிபொருளுடன் சேரும் போது, இதன் தாக்கம் பயங்கரமானதாக இருக்கும். பரிதாபாதில் ஜெய்ஷ் - இ -- முகமது பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய டாக்டர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 360 கிலோ வெடிபொருளிலும் டி.ஏ.டி.பி., இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது, டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தையும், நவ்காம் டாக்டர்கள் வழக்குடன் இணைக்கிறது. மேலும் இரு டாக்டர்கள் கைது டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பை ஏற்படுத்திய டாக்டர் உமர் நபி மற்றும் பரிதாபாதைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ -- முகமது பயங்கரவாதி டாக்டர் முஸாம்மில் ஆகியோருடன் தொடர்பில் இருந்த அல்- பலாஹ் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்கள் முகமது மற்றும் முஸ்தாகிம், மேலும் சட்டவிரோத உர விற்பனையில் ஈடுபட்ட தினேஷ் ஆகிய மூவரை நேற்று முன் தினம் இரவு டில்லி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ