புற்றுக்குள் கூர்ம அவதாரத்தில் கவி ரங்கநாத சுவாமி
சித்ரதுர்கா மாவட்டம் ஹொசதுர்காவின் ஸ்ரீராம்புரா பேரூராட்சியின் கவிரங்கபுராவில் அமைந்துள்ளது ஸ்ரீ கவிரங்கநாத சுவாமி கோவில். விஷ்ணு, தனது இரண்டாவது அவதாரமான, கூர்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார்.புராணங்கள்படி, ஒரு காலத்தில் ஒருவர், மாடு மேய்த்து கொண்டிருந்தார். இவரது பசுக்களில் ஒன்று, மலையின் குகைக்குள் சென்று வந்தது. அதை சாதாரணமாக நினைத்து விட்டு விட்டார். ஆனால், தினமும் மாடு மேய்க்கும் போதெல்லாம், இந்த குகைக்குள் குறிப்பிட்ட பசு மட்டும் சென்று வந்தது. தானாக பால்
ஒரு நாள், பசு, குகைக்குள் செல்லும் போது, மேய்ப்பவரும் மறைந்திருந்து பார்த்தார்.அப்போது, புற்றுக்கு, பசு தானாகவே பால் கொடுத்து கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டார்.உடனடியாக கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்களில், உள்ளூர் மன்னரை சந்தித்து, நடந்தவற்றை விவரித்தார்.அவரும், அந்த குகைக்கு சென்று பார்த்தார். புற்றுக்குள் கூர்ம அவதார விஷ்ணு விக்ரஹம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு கோவில் கட்டினார். அதன்பின், மலை மீதும் கோவில் கட்டினார். அன்று முதல் இக்கோவில் பிரபலமடைந்தது.இக்கோவில் அமைந்துள்ள மலையின் உச்சிக்கு, இரு சக்கர வாகனத்திலும், படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். மலை மீது ராஜகோபுரம் அமைந்துள்ளது. தயிர் தீர்த்தம்
கூர்ம அவதாரத்தில் வீற்றிருக்கும் கவி ரங்கநாத சுவாமிக்கு, சாமந்தி, மல்லிகை, துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். சுவாமிக்கு ஆரத்தி காண்பித்த பின், பக்தர்களுக்கு தீர்த்தமாக தயிர் வழங்கப்படும்.லட்சுமி தேவி தாயாருக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. சிறிய விமான கோபுரம் கட்டப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, ஆஞ்சநேயர், விநாயகர், அனந்த பத்மநாப சுவாமிக்கு சன்னிதிகள் உள்ளன. சுவாமிக்கு தினமும் காலை 8:30 முதல் 10:00 மணி வரை மலர் அபிஷேகம் செய்யப்படும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், ஹொசதுர்கா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, பஸ்சில் செல்லலாம். பஸ்சில் செல்வோர், ஹொசதுர்கா பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து டாக்சியில் செல்லலாம். - நமது நிருபர் -