துப்புரவு தொழிலாளர்களுக்கு கெஜ்ரிவால் தேநீர் விருந்து
புதுடில்லி,:“துப்புரவுத் தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்,”என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.இதுகுறித்து, சமூக வலைதளத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவு:நான் வசிக்கும் பகுதியில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு என் வீட்டில் தேநீர் விருந்து அளித்தேன். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்தேன். தினமும் புன்னகையுடன் நமக்கு சேவை செய்கின்றனர். நாம் வசிக்கும் பகுதிகளை சுத்தமாக பராமரிக்கின்றனர். நீங்களும் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து, அவர்களுடன் மனம்விட்டு பேச வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே, சுத்தமான மற்றும் அழகான டில்லியை உருவாக்க முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஆம் ஆத்மி கட்சியின் 13ம் ஆண்டு துவக்க நாளான நேற்று முன் தினம், கெஜ்ரிவால் தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கவுன்சிலர்களை, துப்புரவுத் தொழிலாளர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து தேநீர் விருந்து அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.கெஜ்ரிவால் வீட்டில் நடந்த தேநீர் விருந்தில் பங்கேற்ற சஞ்சய், “மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி அடைந்த பிறகுதான், எங்களுக்கு மாதந்தோறும் உரிய தேதியில் சம்பளம் கிடைக்கிறது,” என்றார்.மற்றொரு துப்புரவுத் தொழிலாளர் ராஜிவ், “எங்களை வீட்டுக்கு அழைத்து கவுரவிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தச் சந்திப்பு சிறப்பு வாய்ந்தது. எங்கள் குழந்தைகள் பிளஸ் 2 மற்றும் கல்லூரியில் படிப்பதால் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் குறித்தும் கெஜ்ரிவாலுடன் விவாதித்தோம்,”என்றார்.பெண் தொழிலாளி சரிதா, “மாநகராட்சியில் 4,000 துப்புரவுத் தொழிலாளர்கள் ஆம் ஆத்மி ஆட்சியில்தான் நிரந்தரம் செய்யப்பட்டனர். பணி நிரந்தரத்துக்காக இன்னும் பலர் காத்திருக்கின்றனர். அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுகோள் விடுத்தேன்,”என்றார்.கடந்த 2022ம் ஆண்டு நடந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று, பா.ஜ.,விடம் இருந்து நிர்வாகத்தைக் கைப்பற்றியது.