உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரியில் நடிகருக்கு சிறப்பு தரிசனம்; கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்

சபரியில் நடிகருக்கு சிறப்பு தரிசனம்; கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்

சபரிமலை : சபரிமலையில், பக்தர்களை தடுத்து நிறுத்தி, நடிகர் திலீப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் தரிசன வசதி செய்து கொடுத்ததற்கு, கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க, தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.மலையாள நடிகர் திலீப், நேற்று முன்தினம் மாலை சபரிமலைக்கு தரிசனத்திற்கு வந்தார். இரவில் ஹரிவராசனம் பாடும் நேரத்தில், முதல் வரிசையில் வந்த பக்தர்களை தடுத்து நிறுத்திய பின், திலீப் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள், அந்த வரிசையில் நிறுத்தப்பட்டனர்.ஹரிவராசனம் பாடல் முடியும் வரை, அவர்கள் அங்கு நின்று தரிசனம் செய்தனர். இது தொடர்பாக வெளியான செய்திகள் அடிப்படையில், கேரளா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.இதன் மீது விசாரணை நடத்திய சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோர் கடும் அதிருப்தி தெரிவித்தனர். பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்களை தடுத்து நிறுத்தி, நடிகர் திலீப்பும், அவருடன் வந்தவர்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது யார் என்றும் கேள்வி எழுப்பினர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சபரிமலை நிர்வாக அதிகாரி, போலீஸ் தனி அதிகாரி, சன்னிதானம் தனி அதிகாரி ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். இது போன்ற விஷயங்கள், இனிமேல் நடைபெறாது என்பதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும். ஒரு நடிகரால், பல மணி நேரம் வரிசையில் நின்ற பக்தர்களுக்கு, தரிசனம் கிடைக்கவில்லை.சிறப்பு தரிசனத்துக்கு பரிசீலிக்க வேண்டிய, அரசியல் சாசன பதவியில் இருப்பவர்கள் குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. அதில், சினிமா நடிகருக்கு எந்த முன்னுரிமையும் இல்லை.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ