ஹிஜாப் விவகாரத்தில் கல்வித்துறை அறிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை நாட கேரள பள்ளி முடிவு
கொச்சி: கேரளாவில், 'ஹிஜாப்' அணிந்ததால், மாணவி வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் மாநில கல்வித் துறை அளித்த அறிக்கைக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தை நாட பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, கொச்சியின் பள்ளுருத்தியில் கிறிஸ்துவ தனியார் பள்ளி இயங்கி வருகிறது. சமீபத்தில், இங்கு, 8ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி, 'ஹிஜாப்' எனப்படும் தலையை மறைக்கும் உடை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இது, பள்ளி விதிகளுக்கு எதிரானது எனக் கூறிய நிர்வாகம், மாணவியை கண்டித்ததுடன், அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இரு தினங்களுக்கு பள்ளி நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. இதனால், பிற மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதை அடுத்து, கேரள உயர் நீதிமன்றம் பள்ளிக்கு பாதுகாப்பு தர போலீசாருக்கு அறிவுறுத்தியது. இதற்கிடையே, மாணவியை ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு அனுமதிக்குமாறு கேரள அரசும், பள்ளிக்கு உத்தரவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில கல்வித் துறையின் துணை இயக்குநரகம், விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது. அதில், 'ஹிஜாப் அணிந்து வந்ததால், 8ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, அவரின் கல்வி உரிமையை பறிக்கும் செயல். இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுத்தல் அவசியம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தை நாட பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் ஜோஷி கைதாவலப்பில் நேற்று கூறுகையில், “மாணவி வகுப்புக்கு செல்ல பள்ளி தரப்பில் எந்த மறுப்பும் சொல்லப்படவில்லை. அதேபோல், இனி ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எந்த உறுதிமொழியும், மாணவி மற்றும் அவரின் பெற்றோரிடம் பெறவில்லை. எங்கள் பள்ளி மீது சுமத்தப்படும் வீண்பழி குறித்து, கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம்,” என்றார். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் மகள் மன உளைச்சலில் உள்ளதால், பள்ளிக்கு செல்லவில்லை. மீண்டும் அதே பள்ளியில் அவர் படிக்க விரும்பினால் மட்டுமே அனுப்பி வைப்போம்,” என, தெரிவித்தனர்.