உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓராண்டாக மிரட்டிய காஜூர் கர்ணா பிடிபட்டது

ஓராண்டாக மிரட்டிய காஜூர் கர்ணா பிடிபட்டது

குடகு; கடந்த ஓராண்டாக, காஜூர் பகுதியில் விவசாயிகள், வாகன பயணியரை வாட்டி வதைத்த, 'காஜூர் கர்ணா' யானை பிடிபட்டது.குடகு, சோமவாரபேட்டின், காஜூர் பகுதிகளில் காட்டு யானை நடமாடியது. விவசாயிகளின் பயிர்களை நாசமாக்கியது. காபி தோட்டங்களில் புகுந்து, காபி செடிகளை மிதித்தும், தின்றும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. சாலைகளில் செல்லும் வாகனங்களை வழி மறித்து மிரட்டியது. இந்த யானையை, 'காஜூர் கர்ணா' என, அழைத்தனர்.

வேண்டுகோள்

மக்களை அச்சுறுத்தும் யானையை பிடிக்கும்படி கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். எனவே, யானையை பிடிக்க வனத்துறையினர் களத்தில் இறங்கினர். ஓராண்டாக இதை பிடிக்க முடியாமல் திணறினர்.வனத்துறையினரின் கண்களில் சிக்காமல் ஆட்டம் காட்டியது. ஒரே இடத்தில் நிற்காமல் வனப்பகுதிக்கு ஓடி மறைந்தது. யானை அதிக வேகமாக ஓடும் திறன் பெற்றிருந்ததால், பிடிக்க முடியவில்லை.வனத்துறையினர் முயற்சியை கை விடாமல், யடவனாடு, ஜேனுகல்லு பெட்டா மலைப்பகுதி, மாலம்பி, நிட்தா, ஹரதுார் வனப்பகுதிகளில் தேடினர். காஜூரின் சில இடங்களில் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தி, யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். நேற்று முன்தினம், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை, காபி தோட்டத்துக்குள் புகுந்தது.உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர், துபாரே முகாமில் இருந்து அழைத்து வரப்பட ஆறு வளர்ப்பு யானைகளின் உதவியுடன், காஜூர் கர்ணாவை பிடிக்க முற்பட்டனர்.

மயக்க ஊசி

கோபத்தில், யானை போலீசாரின் ஜீப்பை தாக்க முயற்சித்தது. அப்போது வனத்துறை அதிகாரி ரஞ்சன் உடனடியாக மயக்க ஊசி போட்டார். அதன்பின் வனத்துக்குள் 300 மீட்டர் தொலைவு வரை சென்று சோர்ந்து படுத்தது. வனத்துறையினரும் பின் தொடர்ந்து சென்று, யானையை பிடித்து, கிரேன் உதவியுடன் துாக்கி, லாரியில் ஏற்றினர். காஜூர் கர்ணா பிடிபட்டதால், விவசாயிகள், வாகன பயணியர் நிம்மதி அடைந்தனர்.

மிரட்டும் யானை

மைசூரில் இருந்து ஊட்டி, சுல்தான்பத்தேரி, வயநாடு, கண்ணுார் செல்லும் பிரதான சாலையாக சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் பண்டிப்பூர் வனப்பகுதி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகம், கேரளாவுக்கு சென்று வருகின்றன. தினமும் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வனப்பகுதி சாலையில் செல்ல, வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு முன்பு வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், வனப்பகுதி சாலையில் ஒரு இடத்தில் கூர்மையான தந்தம் கொண்ட ஒற்றை காட்டு யானை கடந்த சில தினங்களாக இரவு, பகல் பாராமல் சுற்றி திரிகிறது. காய்கறி, நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளை மறித்து உணவு பொருட்களை சாப்பிடுகிறது.திடீரென ஆக்ரோஷமாக மாறி வாகனங்களை துரத்துகிறது. கூர்மையான தந்தம் இருப்பதால் யானையை பார்த்து வாகன ஓட்டிகள் பயப்படுகின்றனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வனத்துறையினர் முயற்சித்தும் முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ