ஜோனாபூரில் கடத்தப்பட்ட சிறுமி பீஹாரில் ஓடும் ரயிலில் மீட்பு
புதுடில்லி:தெற்கு டில்லியில் இருந்து கடத்தப்பட்ட 8 வயது சிறுமி, பீஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து மீட்கப்பட்டார்.புதுடில்லி ஜோனாபூரில் வசித்த 8 வயது சிறுமி கடந்த 23ம் தேதி மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரில், 'என் மனைவி இறந்து விட்டதால் 8 வயது மகளுடன் வசித்தேன். நான் கூலி வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் என் மகளைக் காணவில்லை' என கூறியிருந்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில், சிறுமியின் தந்தைக்கு போன் செய்த ஒருவர், 'உன் மகளை கடத்தி வைத்துள்ளேன். என் வங்கிக் கணக்குக்கு 20,000 ரூபாய் அனுப்பினால் விடுவிப்பேன்' என மிரட்டினார். இதையடுத்து, அந்த மொபைல் எண்ணை போலீசார் கண்காணித்தனர். அதே நேரத்தில், சிறுமி வீடு இருந்த பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. ஒரு வாலிபர் சிறுமியை அழைத்துச் செல்வது தெரிந்தது. அது, ரோஹித் குமார்,21, என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.மொபைல் போன் எண்ணை வைத்து இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். பீஹார் மாநிலம் பக்ஸர் நகர் அருகில் அந்த மொபைல் எண் செயல்பாட்டில் இருந்தது. மேலும், பாட்னாவை நோக்கிச் செல்லும் ரயில்களில் சாதாரண உடையில் போலீசார் சென்று ஆய்வு நடத்தினர். மேலும், ரயில்வே போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். ஓடும் ரயிலில் சிறுமியையும், ரோஹித் குமாரையும் ரயில்வே போலீசார் கண்டுபிடித்தனர். சிறுமி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார். டில்லி போலீசார் சென்று ரோஹித் குமாரை கைது செய்து, சிறுமியை மீட்டு வந்தனர்.போதைப் பழக்கத்துக்கு அடிமையான ரோஹித் குமார், போதைப் பொருள் வாங்க பணம் இல்லாததால், சிறுமியை கடத்திச் சென்றதாக போலீசார் கூறினார்.