உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முஸ்லிம் முதல்வராவதை லாலு பிரசாத் தடுத்தார்: மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் குற்றச்சாட்டு

முஸ்லிம் முதல்வராவதை லாலு பிரசாத் தடுத்தார்: மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'பீஹாரில், 2005 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க மறைந்த என் தந்தை ராம்விலாஸ் பஸ்வான் விரும்பினார். ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அதற்கு உடன்படவில்லை' என, மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் தலைவருமான சிராக் பஸ்வான் குற்றஞ்சாட்டி உள்ளார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 6ல் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ., - காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. பா.ஜ., கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை அங்கம் வகிக்கின்றன. எதிர்க்கட்சிகளின், 'மஹாகட்பந்தன்' கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., உள்ளிட்டவை உள்ளன. இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தே.ஜ., கூட்டணியில், முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் நேற்று வெளியிட்ட பதிவு: பீஹாரில், 2005 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், என் தந்தை மறைந்த ராம்விலாஸ் பஸ்வான், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க, தன் சொந்த கட்சியையே தியாகம் செய்ய முன்வந்தார். அப்போதும் கூட, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவு அளிக்கவில்லை. கடந்த, 2005ம் ஆண்டிலேயே முஸ்லிமை முதல்வராக ஏற்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் தயாராக இல்லை. தற்போதும் அக்கட்சி தயாராக இல்லை. முஸ்லிம் சமூகத்தினரை ஓட்டு வங்கியாக மட்டுமே ராஷ்ட்ரீய ஜனதா தளம் பார்க்கிறது. இப்படி ஓட்டு வங்கியாக இருந்தால், முஸ்லிம்களுக்கு மரியாதையும், முன்னுரிமையும் எப்படி கிடைக்கும்? இவ்வாறு அவர் குறிப்பிட்டார். சிராக் பஸ்வானின் இந்த கருத்தை ஆதரித்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், “2005-ல், லோக் ஜனசக்தியின் ஆதரவை பெற, பீஹார் முதல்வராக ஒரு முஸ்லிமை நியமிக்க வேண்டும் என, லாலு பிரசாத் யாதவிடம் ராம்விலாஸ் பஸ்வான் கேட்டது உண்மை தான். லாலு பிரசாத் ஒப்புக்கொள்ளாததால், அவர்களால் அரசை அமைக்க முடியவில்லை,” என்றார். 2005ல் என்ன நடந்தது? பீஹாரில், 2005 பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., அடங்கிய தே.ஜ., கூட்டணி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 92ல் வென்றது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75; லோக் ஜனசக்தி 29; காங்., 10 தொகுதிகளை வென்றன. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், காங்., -- லோக் ஜனசக்தி ஆதரவுடன், கூட்டணி அரசை ராஷ்ட்ரீய ஜனதா தளத்தால் அமைக்க முடியவில்லை. 'முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கினால் மட்டுமே ஆதரவு வழங்குவேன்' என, ராம்விலாஸ் பஸ்வான் அப்போது கூறியிருந்தார். இதை லாலு பிரசாத் ஏற்காததால், பீஹாரில் எந்த அரசும் அமையவில்லை. இதையடுத்து அதே ஆண்டு அக்., - நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி