உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடத்தல்காரர்களின் கூட்டாளி லாலு பிரசாத்: மைத்துனரின் புகாரால் பீஹாரில் பரபரப்பு

கடத்தல்காரர்களின் கூட்டாளி லாலு பிரசாத்: மைத்துனரின் புகாரால் பீஹாரில் பரபரப்பு

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை, கடத்தல்காரர்களின் கூட்டாளி என, அவரது மைத்துனர் சுபாஷ் யாதவ் குற்றஞ்சாட்டி உள்ளார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் பீஹாரில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீது, அவரது சொந்த மைத்துனரான சுபாஷ் யாதவ் பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்திஉள்ளார். பாட்னாவில் நேற்று அவர் கூறியதாவது:ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியின் போது கடத்தல்காரர்கள், ரவுடிகளுடன் நேரடி தொடர்பை லாலு பிரசாத் வைத்திருந்தார். 2001ல் அப்போதைய நிதியமைச்சர் சங்கர் பிரசாத் தெக்ரிவாலின் உறவினர் கடத்தப்பட்டதிலும், அவருக்கு தொடர்பு உண்டு. லாலு பிரசாத்தின் நெருங்கிய உதவியாளர் பிரேம் சந்த் குப்தாதான், இந்த பேரத்தை முன்னின்று முடித்தார். இந்த விவகாரத்தில், அமைச்சர் பதவியை சங்கர் பிரசாத் ராஜினாமா செய்தார். ஆள் கடத்தல் ரவுடிகளுக்கு ஆதரவாக லாலு பிரசாத் செயல்பட்டார். 1999ல் லாலுவின் மகளும், தற்போதைய லோக்சபா எம்.பி.,யுமான மிசா பாரதியின் திருமணத்துக்காக, கார் ஷோரூம் ஒன்றில் இருந்து ஏராளமான கார்களை திருடினர். அதில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உண்டு. இதில், எனக்கு தொடர்பு இருந்திருந்தால், கால்நடை தீவன ஊழலில் ஆதாரங்கள் இருந்ததால், லாலு பிரசாத் சிறை சென்றது போல நானும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகார மையங்கள்

பீஹாரில் 1990 - 2005 வரை லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி ஆகியோர் முதல்வர் பதவியில் இருந்தனர். கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிக்கி பதவி இழந்தபோது, தன் மனைவியை முதல்வராக்கினார். 15 ஆண்டு கால ஆட்சியில், ரப்ரியின் சகோதரர்கள் சுபாஷ் யாதவ், சாது யாதவ், அனிருத் பிரசாத் ஆகியோர் அதிகார மையங்களாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. சுபாஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சாது யாதவ், “அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளிலும் சுபாஷ் யாதவ் ஈடுபடுவார். ஆனால், பொதுமக்கள், எங்கள் இருவரையும் இணைத்தே பேசுவர். அவரது தவறுகளுக்கெல்லாம் என் மீது பழி விழுந்தது. தற்போது, சில கட்சிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு முட்டாள்தனமாக பேசி வருகிறார்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raja
பிப் 15, 2025 06:53

பீகாரின் கட்டுமரம் இந்த ஆளு... பீகாரின் கட்டுமர குடும்பம் இவன் குடும்பம்...


raja
பிப் 15, 2025 06:50

ஹையோ ஹையோ கடத்தல்காரர்களின் தலைவனே இவன் தான் இவனை போய் கூட்டாளின்னு சொல்றீங்களே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை