மயானத்துக்கு நிலம் ஒதுக்கீடு 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு
பேத்தமங்களா: தங்கவயலின் டி.கொள்ளஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அய்யம்பள்ளி கிராமத்தில் மயான பகுதி அமைக்க வருவாய்த் துறை அதிகாரிகள் இடத்தேர்வு செய்தனர்.பேத்தமங்களா அருகே உள்ளது அய்யம்பள்ளி. இது டி.கொள்ளஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது. இக்கிராமத்திற்கு மயானம் இல்லை. இதனால் இப்பகுதியினர் ஏரிக்கரை, நடைபாதை ஓரங்களில் உடல்களை புதைத்து வந்தனர்.மயானங்களில் புதைக்க வேண்டுமானால் பல மைல்களுக்கு அப்பால் செல்ல வேண்டிய நிலை இருந்தது.இது குறித்து, அய்யம்பள்ளி கிராமத்தினர் பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் நேற்று அய்யம் பள்ளி கிராமத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ஜனார்தன் சிங், முனி வெங்கடப்பா, சர்வேயர் மவுலாகான் ஆகியோர் வந்து, சர்வே எண் 20ல் அரசு நிலத்தை மயானம் அமைக்க தேர்வு செய்தனர். விரைவில் மயான நிலம் என பட்டா பதிவு செய்வதாக கிராம மக்களிடம் உறுதி அளித்தனர். இதுகுறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் அய்யப்பள்ளி மஞ்சுநாத் கூறுகையில், ''40 ஆண்டுகளாக மயானம் வேண்டும் என்று கிராம பிரமுகர்கள், முயற்சித்து வந்தனர். ''இதற்காக இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது சர்வே பணி முடித்து இடம் ஒதுக்கி உள்ளனர். இதற்கான காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும்,'' என்றார்.