வயநாடு: வயநாட்டில், நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த மூன்று நிலச்சரிவுகளில் சிக்கி, 116 பேர் பலியாகினர். நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அமைந்துள்ளது கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம். இங்கு தமிழக எல்லை சோதனை சாவடியான சோலாடியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மேப்பாடி அமைந்துள்ளது. இங்கு மலைகளுக்கிடையே முண்டக்கை மற்றும் சூரல்மலை அமைந்துள்ளன. தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகள், சுற்றுலா தளங்கள் நிறைந்த பகுதி.இந்த பகுதிகளில் கனமழை பெய்து, தண்ணீர் பெருக்கெடுத்தது. இதில் ஆற்றின் கரையோர மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் காட்டாற்று வெள்ளம் அதிகரித்ததால், முகாம்களில் தங்க வைக்கபட்டவர்கள் மேடான பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று( ஜூலை30) அதிகாலை 1 மற்றும் 2 மணி, 3மணி என 3 முறை முண்டக்கை பகுதியில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு, முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் வெள்ளம், மண், பாறைகள் ஆகியன குடியிருப்புகள், கடைகள், பள்ளிகள், கோவில்கள் மேல் விழுந்தன. . அதில் வீடுகளில் உறங்கிகொண்டிருந்த மக்கள் மண்ணில் புதைந்ததுடன், பெரும்பாலானோர் உடல்கள் மலப்புரம் சாலியாறு ஆற்றிற்கு அடித்து செல்லப்பட்டது. வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பள்ளிகள் மற்றும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மண் சரிவு சிக்கிய பகுதிகளில், உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டது.சூரல்மலை பகுதியில் பாலம் அடித்து செல்லப்பட்டதால், முண்டக்கை பகுதிக்கு யாரும் செல்ல முடியவில்லை. மீட்பு குழுவினர் கயிறு கட்டி, உயிரிழந்த உடல்களையும், காயமடைந்தவர்களை மீட்டனர். சூரல்மலை பகுதி ஆற்றிலும் உடல்கள் மீட்கப்பட்டது.தொழிலாளர்கள் குடியிருந்த 100 வீடுகளை காணவில்லை. இதில் இருந்த தமிழக, கேரளா மற்றும் வடமாநில தொழிலாளர்களை காணாமல் போயுள்ளனர். 500 க்கும் மேற்பட்ட கிராமத்து வீடுகள் இருந்த சுவடே காணாமல் போயுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி ஒரு பக்கம் இடிந்ததுடன், வகுப்பறைகளில் பெரிய மரங்கள் மற்றும் மண் நிறைந்து காணப்பட்டது.சிவன் கோவில் முழுமையாக இடிந்து தரை தளம் மட்டுமே உள்ளது. மீட்பு பணிகளில் கேரளா மட்டுமின்றி தமிழக சமூக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக மருத்துவ குழுவினரும் வயநாட்டில் முகாமிட்டுள்ளனர். முண்டக்கை பகுதியில் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு குழுவினர் ஓடி தப்பியுள்ளனர். எனினும் முண்டக்கை பகுதிக்கு செல்ல முடியாத நிலையில், மீட்பு பணி தொடர்கிறது. இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மிதக்கும் சடலங்கள்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் 11 பேரின் உடல்கள் சாலியாற்றில் மிதந்தது பொது மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இருட்டுக்குத்தி, பொதுகல்லு, பனம்காயம், பூதனம் பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. கைகள், கால்கள், தலைகள் என உடல் பாகங்கள் தனித்தனியே அடித்துச் செல்லப்பட்டதை கண்டதாக கும்பிலபாரா பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.பள்ளி அடித்து செல்லப்பட்டது
மழை காரணமாக நிவாரண முகாமாக செயல்படவிருந்த அரசு பள்ளியும் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டது.ரத்து
நிலச்சரிவு காரணமாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் மாநில அரசு ரத்து செய்துள்ளது. கனமழை காரணமாக சுற்றுலா தலங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக அரசு நிவாரணம்
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
கேரளாவில் வயநாடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. மீட்பு பணி நடக்கும் சுரல்மலை பகுதியில் மழை பெய்து வருகிறது . இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.கோழிக்கோட்டிலும் நிலச்சரிவு
மலப்புரம், கோழிக்கோட்டிலும் நிலச்சரிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரள முதல்வரிடம் போனில் தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். கேரளாவுக்கு முழு உதவி செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.உயிருக்கு போராடும் நபர்
நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை கிராமத்தில் பாயும் வெள்ளத்திற்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நபர் ஒருவர், ஒரு பெரிய பாறையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இவர் பெரிய பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டுள்ளார். இருப்பினும் நிலச்சரிவில் சிக்கிய அவர், எழுந்த நிற்க முடியாத நிலையிலும் உயிரைக் காப்பாற்ற போராடி வருகிறார். அவரை மீட்க மீட்பு படையினர் முயன்று வருகின்றனர்.ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க சீரம் சம்பசிவ ராவ் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை கேரள அரசு நியமித்து உள்ளது.துக்கம் அனுசரிப்பு
நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.தமிழர் பலி
நீலகிரி மாவட்டம், கூடலூர், மரப்பாலம் அட்டி கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், 30, என்பவர், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மண் சர்வில் உயிரிழந்தார். கேரளாவில் வலுக்கும் கனமழை
நிலச்சரிவு நிகழ்ந்த கேரளாவில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா பகுதிகளில் மீண்டும் வலுக்கும் கனமழை பெய்து வருகிறது.கூடலூர் இளைஞர் பலி
நீலகிரி மாவட்டம், கூடலூர், மரப்பாலம் அட்டி கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், 30, என்பவர், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மண் சரிவில் உயிரிழந்தார்.மீட்பு பணியில் ராணுவம்
ராணுவத்தின் கேப்டன் துஷார் தலைமையில் 130 வீரர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து வயநாடு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; ஐ.ஏ.எப்., விமானம் மூலமும், சாலை வழியாகவும் மீட்பு குழு உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்1070 எண்ணை அழையுங்கள்
தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாதவர்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.