உத்தரகண்டில் அரசு பள்ளிக்கு அருகே ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல்
அல்மோரா: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும்முன், உத்தரகண்டில் அரசு பள்ளி அருகே 20 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். இதில் நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் - இ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பு, டாக்டர்களின் மூலம் இத்தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், உத்தரகண்டின் அல்மோரா மாவட்டத்தின் டபரா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் அருகே, ஏராளமான வெடி பொருட்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு குழுவினருடன் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பள்ளி வளாகம் அருகே 20 கிலோ எடையுள்ள, 161 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதுதவிர பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 20 அடி ஆழத்தில் பூமிக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்களையும் கைப்பற்றினர். இவற்றை யார் பதுக்கி வைத்தது, பயங்கரவாத சதிச்செயலாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.