குடும்பமாக சேர்ந்து குடும்பமாக வளர்வோம் எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி
வாரணாசி; ''அதிகாரத்திற்காக ஏங்குபவர்களுக்கு சொந்த குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமே கவனத்தில் இருக்கும். எங்கள் அரசோ அனைவருக்குமான வளர்ச்சிக்காக உழைக்கிறது,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.உத்தர பிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, வாரணாசியில், 3,880 கோடி ரூபாய் மதிப்பிலான, 44 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.அப்போது அவர் பேசியதாவது:'அனைவரும் இணைந்து; அனைவருக்கும் வளர்ச்சி' என்பதை தாரக மந்திரமாக வைத்து இந்த ஆட்சி நடக்கிறது. ஆனால் இதற்கு நேர் எதிராக சிலர் உள்ளனர். 'அவர்கள் அதிகாரப் பசியுடன், இரவு - பகலாக அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவர். அவர்களுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை, குடும்ப நலனும் குடும்ப வளர்ச்சி மட்டுமே அவர்களின் நோக்கம்.'குடும்பமாக இணைந்து; குடும்பமாக வளர்வோம்' என்பதே அவர்களின் தாரக மந்திரம். கடந்த, 10 - 11 ஆண்டுகளுக்கு முன்வரை, பூர்வாஞ்சல் பகுதியில் மருத்துவ சேவை கிடைப்பதில் சிக்கல் இருந்தன. ஆனால் இன்றோ, மருத்துவ தலைநகரமாக காசி மாறியுள்ளது. டில்லி, மும்பையைச் சேர்ந்த பிரபல மருத்துவமனைகள் இங்கு கிளைகளை திறந்துள்ளன. கடந்த, 10 ஆண்டுகளில் பனாரசின் வளர்ச்சி புதிய வேகத்தை பெற்றுள்ளது. காசி எப்போதும் பாரம்பரியத்தை பாதுகாத்து, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இன்று காசி பழமை யானது மட்டுமல்ல, முற்போக்கானதும் கூட.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.