உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவோம்: பெங்களூரு பிரசாரத்தில் அமித் ஷா ஆவேசம்

ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவோம்: பெங்களூரு பிரசாரத்தில் அமித் ஷா ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : ''காங்கிரஸ் ஆட்சி நடந்த 10 ஆண்டுகளில், 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது. ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டுமா, வேண்டாமா? கண்டிப்பாக ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவோம்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக பேசினார்.பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூரு வந்தார். ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அவர், நேற்று பகலில் நகரின் அரண்மனை மைதானத்தில் நடந்த பா.ஜ.,வின் வெற்றி சங்கல்பம் மாநாட்டில் பங்கேற்றார்.

23 ஆண்டுகள்

பெங்., ரூரல் - மஞ்சுநாத், பெங்., தெற்கு - தேஜஸ்வி சூர்யா, பெங்., சென்ட்ரல் - பி.சி.மோகன், பெங்., வடக்கு - ஷோபா, சிக்கபல்லாபூர் - சுதாகர் ஆகிய பா.ஜ., வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.பின், அவர் பேசியதாவது: தொண்டர்களின் உற்சாகத்தை பார்க்கும் போது, கர்நாடகாவில் 28க்கு, 28 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. முதல்வர், பிரதமர் என 23 ஆண்டுகளாக நரேந்திர மோடி, உயர்ந்த பதவியில் இருக்கிறார்.ஆனால், ஒருநாள் கூட அவர் விடுமுறை எடுத்தது கிடையாது. காங்கிரசின் ராகுல், கோடை காலம் வந்தால் போதும், வெளிநாட்டுக்கு பறந்து விடுவார்.

ரூ.12 லட்சம் கோடி

நாட்டுக்காகவே உழைத்து வரும் மோடிக்கு எதிராக ஊழல் கட்சி தலைவர்கள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கியுள்ளனர். மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த 10 ஆண்டுகளில், 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது.அதே 10 ஆண்டு மோடியின் ஆட்சியில் 25 பைசா கூட ஊழல் நடக்கவில்லை. காங்., ஆட்சியில், 2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல், ஐ.என்.எக்ஸ்., உழல், ஏர்செல் ஊழல் என இப்படி சொல்லி கொண்டே போகலாம்.இப்படி ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டுமா, வேண்டாமா? கண்டிப்பாக ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவோம். அது உங்கள் கைகளில் தான். நாடு வளர்ச்சி அடைவதும் உங்கள் கைகளில் தான்.

60 சதவீதம் ஓட்டுகள்

நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். அனைத்து இடங்களிலுமே மோடி, மோடி, என்று தான் மக்கள் கோஷம் எழுப்புகின்றனர்.கர்நாடகாவில், 2014ல் 43 சதவீதம் ஓட்டுகளுடன், 17 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்தது. 2019ல், 51 சதவீதம் ஓட்டுகளுடன் 25 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. 2024ல், 60 சதவீதம் ஓட்டுகளுடன், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியை 28 தொகுதிகளில் வெற்றி பெற செய்யுங்கள்.இங்கு ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெற கூடாது. நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் நேராக மோடியை சென்றடையும். மத்தியில் சோனியா குடும்பம் ஊழல் ஆட்சி நடத்தினால், கர்நாடகாவில் துணை முதல்வர் சிவகுமார் ஊழல் செய்துள்ளார்.

மக்கள் நலன்

நாட்டு மக்களுக்கு இரண்டு வாய்ப்பு உள்ளன. ஒன்று, 23 ஆண்டுகளாக ஏழைகள், விவசாயிகள், மகளிர், ஒடுக்கப்பட்டோருக்காக உழைக்கும் மோடி வேண்டுமா? அதிகாரம் கிடைக்கும் போதெல்லாம் ஊழல் செய்யும் காங்கிரஸ் வேண்டுமா?மோடியுடன் 40 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றுகிறேன். ஒரு நாளும் நாட்டு மக்கள் நலனை தவிர, வேறு எதை பற்றியும் யோசித்தது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை

பின், தாவணகெரே, சிக்கபல்லாபூர், சித்ரதுர்கா, பெங்களூரின் நான்கு தொகுதிகளின் அதிருப்தியாளர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி, அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அனைவரும் கட்சிக்காக உழைக்கும்படி உத்தரவிட்டார்.மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.

தலைவர்களுக்கு இலக்கு நிர்ணயம்

தனியார் நட்சத்திர ஹோட்டலில், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுடன் அமித் ஷா, நேற்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.அப்போது, 'பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை கவரும் வகையில், பிரமுகர்களை ஒன்றிணைக்க வேண்டும். தனி தொகுதிகளிலும், எஸ்.டி., தொகுதிகளிலும் அதிக அளவில் ரோடு ஷோ ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு கட்சி தலைவர்களும் மனம் தளராமல் ஒற்றுமையுடன் பணியாற்றினால், 28 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம் கிடையாது.'எடியூரப்பா, குமாரசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். பூத்மட்ட தொண்டர்களிடம் அதிருப்தி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மூத்த தலைவர்களை நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என்று அமித் ஷா ஆலோசனை கூறியுள்ளார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஏப் 03, 2024 05:42

சிறைக்கு அனுப்பினால் மட்டும் போதாது அவர்களின் சொத்துக்களியும் பறிமுதல் செய்ய வேண்டும் நீதித்துறையில் உள்ள கறுப்பாடுகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்


Senthoora
ஏப் 03, 2024 19:57

முதலில் சொன்னவரை சிறைக்கு அனுப்பனும் என்ன முதலில் அவரின் கை சுத்தமாக்கப்படணும்


Mani . V
ஏப் 03, 2024 04:12

முக்கிய குறிப்பு "பிற கட்சியில் உள்ள" என்று முன்னால் சேர்த்துப் படிக்கவும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ