எடை குறைவான நவீன பதுங்குகுழி வடிவமைத்தது தார்வாட் ஐ.ஐ.டி., குழு
பெங்களூரு: ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக, எளிதில் கழற்றிப் பொருத்தக்கூடிய மற்றும் குண்டு துளைக்காத எடை குறைந்த நவீன பதுங்குகுழியை கர்நாடகாவின் தார்வாட் ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் குழு வடிவமைத்து சாதனை படைத்துள்ளது. எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்கள், எதிரிப் படைகளின் தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ள பதுங்குகுழிகள் பெரிதும் உதவி வருகின்றன. ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள பதுங்குகுழிகள், கான்கிரீட் மற்றும் மணல் மூட்டைகளால் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான எடை உடையது. மேலும், அவற்றை கட்டுவதற்கும் நீண்ட நாட்கள் ஆகிறது. வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு – காஷ்மீர் போன்ற கரடுமுரடான, உயரமான மலைப்பகுதிகளுக்குக் கனரகக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வது மிகவும் கடினம். போர்க்களத்தில் அல்லது எல்லையில் பாதுகாப்புச் சூழல் மாறும்போது, பழைய பதுங்குகுழிகளை வேறொரு இடத்திற்கு மாற்ற முடியாது. இது, நம் எல்லை பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், நம் ராணுவத்தின் கிழக்கு பிராந்திய பிரிவின் நிதியுதவியுடன் கர்நாடகாவின் தார்வாட் பகுதியில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு, 500 கிலோ எடை மட்டுமே உள்ள நவீன பதுங்குகுழியை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தார்வாட் ஐ.ஐ.டி., நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: மிக குறைந்த எடையிலான, எளிதில் கழற்றி பொருத்தக்கூடிய பதுங்கு குழிகளை எங்கள் ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கி உள்ளது. ‘செராமிக், கெவ்லர் உள்ளிட்ட சிறப்பு கலவைப் பொருட்களால் இந்தப் பதுங்குகுழி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏ.கே., 47 ரக துப்பாக்கி உள்ளிட்டவற்றின் குண்டுகள் துளைக்க முடியாத அளவுக்கு இந்த பதுங்குகுழிகள் உறுதியாக உள்ளது. இதை, ராணுவ அதிகாரிகள் நேரடியாக துப்பாக்கிச்சூடு சோதனை செய்தும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்தச் சோதனைக்குபின், இதுபோன்ற மூன்று பதுங்குகுழிகள் ராணுவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பதுங்குகுழியை, தார்வாட் ஐ.ஐ.டி.,யின் இயந்திரவியல் மற்றும் விண்வெளிப் பொறியியல் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் டாக்டர் வியோம் சர்மா, டாக்டர் புன்னாக் சாட்டர்ஜி ஆகியோர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு வடிவமைத்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘விமான நிலையங்களில்
பதுங்குகுழிகள் தேவை’– சிறப்பு நிருபர் –நம் நாட்டின் பதற்றமான சூழல் நிலவும் 17 முக்கிய விமான நிலையங்களில் நிரந்தரப் பதுங்குகுழிகளை அமைத்துத் தரும்படி மத்திய விமானப் போக்குவரத்துத் துறையிடம் சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, பார்லிமென்ட் குழுவிடம் நேற்று சமர்ப்பித்த பாதுகாப்பு அறிக்கையில், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் போர்க்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தக் கோரிக்கையை சி.ஐ.எஸ்.எப்., முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.இதன்படி, ஸ்ரீநகர், ஜம்மு, லே, அமிர்தசரஸ், சண்டிகர், ஜோத்பூர், புஜ், போர்பந்தர், ராஜ்கோட், குவாலியர், சிம்லா, புன்டர், கொல்கட்டா, பாக்டோக்ரா, அகர்தலா, சில்சார் மற்றும் ஷில்லாங் ஆகிய 17 விமான நிலையங்களில், அனைத்துத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்கும் நிரந்தரப் பதுங்குகுழிகளை அமைத்துத் தரும்படி மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் சி.ஐ.எஸ்.எப்., வலியுறுத்தியுள்ளது.