கலால் அலுவலகத்தில் மதுபாட்டில்கள் லோக் ஆயுக்தா சோதனையில் சிக்கின
பெங்களூரு, : பெங்களூரில் புதிதாக மதுக்கடை துவங்க, அந்தந்த மண்டலங்களில் உள்ள கலால் அலுவலகங்களில் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. புதிதாக மதுக்கடை திறக்க அனுமதி கேட்டால், விண்ணப்பங்கள் தேவையின்றி நிராகரிக்கப்படுகின்றன. மதுக்கடை உரிமையாளர்களுக்கு, கலால் அதிகாரிகள் தொல்லை கொடுக்கின்றனர் என்பது உட்பட, பல புகார்கள் லோக் ஆயுக்தாவிற்கு தொடர்ந்து சென்றன.இதையடுத்து லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல், துணை லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா தலைமையில், லோக் ஆயுக்தா போலீசார், பெங்களூரில் கலால் அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது யஷ்வந்த்பூர், பேட்ராயனபுராவில் உள்ள கலால் அலுவலகங்களில் இருந்து, விலை உயர்ந்த மதுபாட்டில்கள் சிக்கின.ஆய்வு குறித்து நீதிபதி பி.எஸ்.,பாட்டீல் கூறியதாவது:கலால் அலுவலகங்கள் தொடர்பாக எங்களுக்கு 130 புகார்கள் வந்தன. இதனால் கலால் அலுவலகங்களில் சோதனை நடத்தினோம். அப்போது சில கலால் அலுவலகங்களில் முறைகேடு நடப்பது கண்டறியப்பட்டு உள்ளது.யஷ்வந்த்பூர், பேட்ராயனபுரா கலால் அலுவலகங்களில் மதுபாட்டில்கள் சிக்கின. அந்த இரு அலுவலகத்திலும் அதிகாரிகள் இல்லை.சில அதிகாரிகள் பதிவேட்டில் பதிவு செய்யாமல் வெளியே சென்று உள்ளனர். கணக்கில் வராத இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நாங்கள் மொபைல் போனில் அழைத்தால், கலால் அதிகாரிகள் எடுப்பது இல்லை. எங்களது அழைப்பை பார்த்தால், மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்கின்றனர். சில அலுவலகங்களில் ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் பணி செய்வதை கண்டுபிடித்தோம்.அலுவலகத்திற்கு வராதவர்கள் காரணம் கூற வேண்டும். சரியான காரணம் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர்கூறினார்.லோக் ஆயுக்தா நீதிபதி சோதனை நடத்தியபோது, பெங்களூரு யஷ்வந்த்பூர், பேட்ராயனபுரா கலால் அலுவலகங்களில் மதுபாட்டில்கள் சிக்கின.