முடா அலுவலகத்தில் லோக் ஆயுக்தா ரெய்டு
மைசூரு: 'முடா' முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், 'முடா' அலுவலகத்தில் நேற்று லோக் ஆயுக்தா போலீசார் மீண்டும் ரெய்டு நடத்தினர்.'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் வீட்டுமனை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு பற்றி, மைசூரு லோக் ஆயுக்தா போலீசாரும் விசாரிக்கின்றனர். 'முடா' முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை வரும் 26ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என, லோக் ஆயுக்தாவுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக அறிக்கை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு, மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் தலைமையில், 'முடா' அலுவலகத்திற்கு போலீசார் சென்றனர். அலுவலகத்தின் அனைத்து அறைகளின் கதவையும் மூடினர்.பின், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். இந்த சோதனை ஒரு மணி நேரம் நீடித்தது. காலை 7:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.