உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாமா, ருக்மிணியுடன் தரிசனம் தரும் கிருஷ்ணர்

பாமா, ருக்மிணியுடன் தரிசனம் தரும் கிருஷ்ணர்

கிருஷ்ணர், ஹிந்துக்களின் கடவுள். இவரை வணங்கினால் கஷ்டங்கள் நெருங்காது என்பர். பொதுவாக ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில், சத்யபாமா சேர்ந்திருப்பதை பார்க்கலாம். பாமா, ருக்மிணி என, இரண்டு மனைவியருடன் கிருஷ்ணர் இருப்பது மிகவும் அபூர்வமானதாகும்.இந்த காட்சியை காண விரும்பினால், பக்தர்கள் சிக்கமகளூருக்கு வர வேண்டும். சிக்கமகளூரு நகரின், அம்பளே கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு பாமா, ருக்மிணிக்கு நடுவே, கிருஷ்ணர் நின்றுள்ளார். இவரை சந்தான வேணுகோபால சுவாமி என்றும் அழைக்கின்றனர்.ராமாயண காலத்தில், அம்பளே கிராமம் அடர்ந்த வனமாக இருந்தது. அகஸ்திய முனிவரின் சீடரான நாராயண மகரிஷி, இங்கு தவத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பசு மாடு ஒன்று, தினமும் புற்றுக்கு வந்து பால் சுரந்தது. இதை கவனித்த நாராயண மகரிஷி, புற்றில் ஏதோ மகத்துவம் உள்ளது என, கருதி பூஜிக்க துவங்கினார்.அதன்பின் ஹொய்சளர்கள் ஆட்சி காலத்தில், பாளையக்காரர் சோமராஜனின் கனவில் தோன்றிய வேணுகோபால சுவாமி, 'எனக்கு ஒரு கோவில் கட்டு' என, உத்தரவிட்டார். எனவே, சோமராஜன் தன் மகளான யாமளாதேவியின் பெயரில், வேணுகோபால சுவாமி கோவிலை கட்டியதாக, புராணங்கள் கூறுகின்றன.தொல்பொருள் துறை தகவலின் படி, பாமா, ருக்மிணியுடன் கிருஷ்ணர் சேர்ந்திருக்கும் தென்னகத்தின் ஒரே கோவில் இதுதானாம். இவரை வேண்டினால், வாழ்வு வளமாகும். குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதே காரணத்தால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி நாளன்று, சிறப்பு பூஜைகள் நடக்கும். இக்கோவிலுக்கு பெருமளவில் பக்தர்கள் வருகை தருவர். தினமும் காலை 6:30 மணி முதல், இரவு 7:00 மணி வரை தரிசனம் செய்யலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி