UPDATED : டிச 25, 2025 04:56 PM | ADDED : டிச 25, 2025 04:52 PM
புனே: புனேயில் நடக்கும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அள்ளிவிட்டுள்ளனர். இது சமூக ஊடகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.பொதுவாக தேர்தலின் போது வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள், பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை வாரி வழங்குவது வழக்கம். சேலை, குடம், பாத்திரங்கள் ஆகியவற்றை கட்சி நிர்வாகிகள் மூலம் கொடுப்பார்கள். இது அனைத்தும் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போது நடப்பது வாடிக்கை.ஆனால், மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சிக்கு நடக்க உள்ள தேர்தலில் கவுன்சிலர்களாக போட்டியிடுபவர்கள் இதனை மிஞ்சும் வகையில் பரிசு பொருட்களை வாரி வழங்க முன்வந்துள்ளனர்.லோகோன் - தனோரி வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தன்னை வெற்றி பெற செய்தால், 11 வாக்காளர்களுக்கு குலுக்கல் முறையில் தலா 1,100 சதுர அடி கொண்ட நிலத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.விமன் நகரில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை தாய்லாந்துக்கு 5 நாட்கள் சுற்றுலா அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர். மற்ற வார்டுகளில் குலுக்கல் முறையில் சொகுசு கார்கள், டூவிலர்கள் மற்றும் தங்க நகைகளை பரிசாக வழங்குவதாக கூறியுள்ளனர். பெண்களை கவரும் வண்ணம், தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகையால் நெய்யப்பட்ட சேலை, தையல் எந்திரங்கள் மற்றும் சைக்கிள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை கவரும் வண்ணம் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில், பரிசு பொருட்கள் மட்டுமல்லாமல் சில இணைப்புகளும் நடந்து வருகின்றன. பல ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனர். சரத்பவார் மற்றும் அஜித் பவார் இரு தரப்பும் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.