தோல் நோயை குணப்படுத்தும் மத்திதல்லேஸ்வரா
மாண்டியா மாவட்டம் மலவள்ளியின் கண்டேகலா கிராமத்தில் அமைந்து உள்ளது மத்திதல்லேஸ்வரா கோவில்.புராணங்கள்படி, இப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களில், ஒன்றில் இருந்து மட்டும் கறக்கப்படும் பால் அளவு குறைவாக இருந்தது. தினமும் இதே போன்ற நிலைமைதான். ஒரு நாள் மாட்டின் உரிமையாளர், மாட்டை பின் தொடர்ந்து சென்று பார்த்த போது, அவர் ஆச்சரியம் அடைந்தார். அப்பகுதியில் காணப்பட்ட பாம்பு புற்றின் அருகில் வந்து நின்று கொண்டிருந்தது. அதன் மடியில் இருந்து தானாக புற்றுக்குள் பால் சுரந்தது.இதை கவனித்த அவர், ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தார். அவர்களும், அக்கம் பக்கத்து கிராமத்தினரும் புற்றை அகற்றி பார்த்தனர். புற்றினுள் சிவலிங்கம் இருப்பதை பார்த்தனர் ஆச்சரியப்பட்டனர். அதன் பின், அந்த இடத்தில் கோவில் கட்டி, கிராம மக்கள் வணங்க துவங்கினர்.இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தால் நாகதோஷம், தோல் நோய், குழந்தை பாக்கியம் என பல கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வேண்டுவர். அவர்களுக்கு, நல்லதே நடந்துள்ளது.இக்கோவில் முன் சிறிய தீர்த்த குளம் உள்ளது. கோவிலுக்குள் செல்லும் முன், இந்த தீர்த்த குளத்தில் இறங்கி தண்ணீரை எடுத்து மூன்று முறை தலை மீது தெளித்து கொள்ள வேண்டும். அதன் பின், முடி காணிக்கை செலுத்திய பின், அருகில் உள்ள 'நாக குள'த்தில் நீராட வேண்டும்.இதை தொடர்ந்து கோவில் அருகில், ஆங்காங்கே சிறு சிறு கற்கள் வைத்து அடுப்பு தயார் செய்து, நாம் கொண்டு வந்த உணவுப்பொருட்களை வைத்து சமைக்க வேண்டும். உணவு, பஜ்ஜி, போண்டா, வடை என எதுவாக இருந்தாலும் பக்தர்களே தயார் செய்யலாம்.தயார் செய்யப்பட்ட உணவை, மத்திதல்லேஸ்வரா சுவாமி கருவறையில் வைத்து பூஜை செய்வர். இந்த உணவு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.இக்கோவில், வாரத்தில் வியாழன், ஞாயிற்றுகிழமைகளில் அதிகாலை 5:00 முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். தோஷங்கள், தோல் நோய் உள்ளவர்கள் மூன்று அல்லது ஐந்து முறை, இக்கோவிலுக்கு வந்து, தன் கையால் உணவு தயாரித்து, சுவாமி முன் படைக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்.நாக தோஷம் உள்ளவர்கள், பாம்பு புற்றில் பால், வெண்ணெய் ஊற்றி வழிபட்டால், நாகதோஷம் விலகும். தோல் நோய் உள்ளவர்கள் குளத்தில் நீராடிய பின், அத்தி மரத்தை சுற்றி வந்து வணங்கினால், நோய்கள் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர் மைசூரில் இறங்கி, அங்கிருந்த பஸ், டாக்சியில் செல்லலாம்.ரயிலில் செல்வோர் மாண்டியா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மலவள்ளிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.பஸ்சில் செல்வோர் மலவள்ளி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து செல்லலாம்.
17_Article_0001, 17_Article_0002, 17_Article_0003
கோவிலுக்கு முன் உள்ள தீர்த்த குளம். (அடுத்த படம்) தோல் நோயை குணமாக்கும் நாககுளம். (கடைசி படம்) மத்திதல்லேஸ்வரா சுவாமி. - நமது நிருபர் -