பெலகாவி: மகாத்மா காந்தி தலைமையில் தேசிய காங்கிரஸ் மாநாடு நடந்து, நுாற்றாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, பெலகாவியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பேசிய, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து சந்தேகம் தெரிவித்தார்.இந்திய சுதந்திர போராட்டம் கடந்த 1924ல் சூடு பிடித்திருந்தது. மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில், 1924 டிசம்பர் 27ம் தேதி, மகாத்மா காந்தி தலைமையில் பெலகாவியில் காங்கிரஸ் தேசிய மாநாடு நடந்தது. அப்போது, அவர் அகில இந்திய காங்., தலைவர் பொறுப்பில் இருந்தார். மாநாடு நடந்து நுாற்றாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று பெலகாவியில், 'காந்தி பாரதா' என்ற பெயரில் விழா நடக்க உள்ளது. செயற்குழு கூட்டம்
நுாற்றாண்டு கொண்டாட்டத்தை பயன்படுத்தி, நாடு முழுதும் கட்சியை பலப்படுத்த, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பெலகாவியில் நுாற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மதியம் 3:00 மணிக்கு, செயற்குழு கூட்டம் துவங்கியது.காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகித்தார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உட்பட, 200க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு சோனியா, பிரியங்கா வரவில்லை.செயற்குழு உறுப்பினர்களுக்கு, தோல் பையில் மைசூரு பட்டு சால்வை, சந்தன சோப் உட்பட பல பரிசு பொருட்களுடன், காந்தியின் 'என் கனவு இந்தியா' புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. கதராடை மேளா
நுாற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பெலகாவி நகரின் சர்தார் மைதானத்தில், அரசின் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ராட்டை மற்றும் கதராடை மேளாவை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். நேற்று துவங்கிய மேளா ஜனவரி 4ம் தேதி வரை நடக்கவுள்ளது.கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும, சுய உதவிக்குழு பெண்கள், அவரவர் மாவட்டங்களின் சிறப்பு உற்பத்தி பொருட்களை மேளாவில் வைத்துள்ளனர். 150 கடைகள் உள்ளன. சென்னப்பட்டணா பொம்மைகள், இளகல், மொலகால்மூர் சேலைகள், நார் உற்பத்திகள், வீட்டு அலங்கார பொருட்கள், ஆயுர்வேத மருந்துகள், பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை பொதுமக்களின் பார்க்கலாம். இங்கு உணவு மேளாவும் நடக்கிறது. காந்தி சிலை
காங்., மாநாட்டின் நுாற்றாண்டை முன்னிட்டு, பெலகாவி நகரின் திகளவாடியில் உள்ள வீரசவுதா வளாகத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலையை முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் செடிகளை நட்டு திறந்து வைத்தனர். அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், ஹெச்.கே.பாட்டீல், மஹாதேவப்பா, லட்சுமி ஹெப்பால்கர், முனியப்பா என பலர் உடன் இருந்தனர்.இதன்பின் செயற்குழு கூட்டம் ஆரம்பமானது.இதில், மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான செயல் குறித்து, பல கேள்விகள் எழுந்துள்ளன. இதன் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நீதிமன்ற உத்தரவு தொடர்பான தகவலை பகிர்ந்து கொள்ள, தேர்தல் விதிமுறைகளை மாற்றினர்.சில வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது, சிலரை ஓட்டு போட விடாமல் தடுப்பது, வாக்காளர் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பது, இறுதி நேரத்தில் ஓட்டுப்பதிவு அதிகரிப்பது என, பல கேள்விகளுக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து, பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. பா.ஜ., கூறியபடியே தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, 75 லட்சம் ஓட்டுகள் குறைந்தன. சட்டசபை தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. பா.ஜ., வெற்றி
மஹாராஷ்டிராவில் 118 தொகுதிகளில், ஓட்டுப்பதிவு இறுதி கட்டத்தின் ஒரு மணி நேரத்தில், 75 லட்சம் ஓட்டுகள் பதிவாகின. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்த 102 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.இறுதி வினாடியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க, என்ன காரணம். தேர்தல் ஆணையம் சரியான தகவல் தரவில்லை. நீதிமன்றத்தை நாடும் சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து நாடு முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.