மஹா., அமைச்சரவையில் பட்னவிசுக்கு உள்துறை
மும்பை,: மஹாராஷ்டிராாவில் அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கு, நேற்று துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல்வர் தேவேந்திர பட்னவிசுக்கு உள்துறையும், துணை முதல்வரான அஜித் பவாருக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.முதல்வராக, பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் கடந்த 5ம் தேதி பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.மஹாயுதி கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்த 18ம் தேதி 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் உள்துறை, நிதி உள்ளிட்ட துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில், அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதற்கு முன் முதல்வர் பதவியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே வசமிருந்த உள்துறை, தற்போது முதல்வராக உள்ள தேவேந்திர பட்னவிசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் எரிசக்தி துறைகளும் பட்னவிசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பொதுப்பணி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைகள் ஒதுக்கப்பட்டுஉள்ளன. மற்றொரு துணை முதல்வரான அஜித் பவாருக்கு, நிதி, திட்ட அமலாக்கம் மற்றும் கலால் துறை அளிக்கப்பட்டுள்ளன.பா.ஜ.,வின் சந்திரகாந்த் பாட்டீலுக்கு தொழில்நுட்ப கல்வித்துறையும், பங்கஜா முண்டேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் ஒதுக்கப்பட்டுஉள்ளன. பா.ஜ., மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலேவுக்கு வருவாய் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.