உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்

மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அரசின் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக பதவியேற்ற 39 பேரில், அதிகபட்சமாக 19 பேர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள்.மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக, பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் கடந்த 5ம் தேதி பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், மஹாயுதி கூட்டணி அரசின் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாக்பூரில் நேற்று நடந்தது. மஹாயுதி கூட்டணி சார்பில் 39 பேர், புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதில், பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் சந்திரசேகர் பவான்குலே, ராதாகிருஷ்ணா விகேபாட்டீல், சந்திரகாந்த் பாட்டீல், ஆஷிஷ் ஷெல்லார், பங்கஜா முண்டே உட்பட 19 பேரும், சிவசேனா சார்பில் உதய் சாமந்த், குலாப்ராவ் பாட்டீல், தாதாஜி பூஷே உட்பட 11 பேரும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஹசன் முஷ்ரீப், தனஞ்செய் முண்டே உட்பட ஒன்பது பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.கடந்த மஹாயுதி ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்த ஒன்பது பேருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம், மாநில தலைநகர் மும்பைக்கு பதிலாக நாக்பூரில் 33 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. கடந்த, 1991ல் மஹாராஷ்டிரா முதல்வராக பதவி வகித்த சுதாகர்ராவ் நாயக் தலைமையிலான அமைச்சரவை நாக்பூரில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ