| ADDED : ஜன 04, 2025 08:31 AM
புதுடில்லி; கொரிய விமான விபத்தைத் தொடர்ந்து, பறவைகள் தாக்குதல்களில் இருந்து விமானங்களை பாதுகாக்கும் வழிகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆராய தொடங்கி உள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து தென்கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் அண்மையில் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 பேர் மட்டுமே உயிர் பிழைக்க 179 பேர் பலியாகினர். விபத்து எப்படி நிகழ்ந்தது பற்றிய விசாரணை ஒரு பக்கம் இருக்க, பறவை மோதியதே விபத்துக்கு காரணம் என்ற தகவலும் வெளியாகியது. இந்த விபத்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்பான முறையில் விமான பயணங்களை திட்டமிடுவது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் என்ற குரல்கள் வலுவாக எழுந்துள்ளன.இந் நிலையில், இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் முக்கிய முடிவுகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் விமானங்கள் மீது பறவைகள் தாக்கிய சம்பவங்களின் சதவீதம் 9.68 ஆக பதிவாகி இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களின் சதவீதம் என்பது 4.26 ஆக தான் இருந்திருக்கிறது.விமானங்கள் மீது பறவைகள் மோதும் போது தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்தது உண்டு. கடந்த ஆகஸ்டில் கோவாவின் தபோலின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், பறவை மோதியதில் என்ஜின் பழுதாகி பயணம் தடைப்பட்டது.தொடரும் இத்தகைய சம்பவங்களில் விமானத்தையும், பயணிகளையும் பாதுகாக்க தீவிரமாக ஆலோசித்து வருவதாக விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் கூறி உள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது; பெருகி வரும் நகர்ப்புறங்களின் வளர்ச்சியானது, புறநகர்களிலும் நெருக்கத்தை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக விமான நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகள் வெகு வேகமாக வளர்ந்து வருகின்றன. குப்பைகள், மாமிச கழிவுகள் பெருகுவதால் இரை தேடும் பறவைகளும் அங்கு திரள்கின்றன. எனவே, பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தும் அவசியம் எழுந்திருக்கிறது என்கின்றனர்.விமான பொறியாளர்கள் கூறுகையில், நவீன ரக விமானங்கள் அனைத்தும், பறவை தாக்குதலால் சேதம் அடையாத வகையில் அதற்கான சோதனைகளில் தேர்வாக வேண்டும். அதற்கான தொழில்நுட்ப மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் மேம்பட வேண்டும் என்று கூறி உள்ளனர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுடில்லி விமான நிலையத்தில் மட்டும் 2023ம் ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 169 முறை பறவைகள் விமானங்கள் மீது மோதிய சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. பெங்களுருவிலும் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நடந்திருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், இத்தகைய நிகழ்வுகள் தொடராமல் இருக்கவும், அதில் இருந்து காத்துக் கொள்ளவும் டில்லி விமான நிலைய அதிகாரிகள் முயன்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வனவிலங்கு ஆபத்து மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குழுவில் உயிரியல் வல்லுநர்கள் உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்று இருக்கின்றனர். விமான நிலையங்கள் அருகில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள், மாமிச கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கும் வண்ணம் குப்பைகள் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம்களையும் அவர்கள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.