உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொற்கோவிலில் சேவையில் ஈடுபட்ட முன்னாள் துணை முதல்வரை சுட்டவர் கைது

பொற்கோவிலில் சேவையில் ஈடுபட்ட முன்னாள் துணை முதல்வரை சுட்டவர் கைது

அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோவிலில் சிரோமணி அகாலி தள தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் தீவிரவாதியை, போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சுக்பிர் சிங் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பஞ்சாபில் பலமுறை ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர் சுக்பிர் சிங் பாதல், 62. மறைந்த முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகனான இவர், பஞ்சாபின் துணை முதல்வராக இரு முறையும், பிரோஸ்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். அகாலி தளம் ஆட்சியில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், சீக்கிய மதத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அவருக்கு, அகாலி தளம் கட்சி மன்னிப்பு வழங்கியது. இது தொடர்பாக, சீக்கிய மதத்தின் உயர்நிலை அமைப்பான அகால் தத் விசாரணை நடத்தியது. இதன் முடிவில், சுக்பிர் சிங் பாதல் உட்பட அகாலி தளம் கட்சியினர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். சுக்பிர் சிங் பாதலுக்கு, பஞ்சாப் பொற்கோவிலில் காவலராக பணி புரிதல், பாத்திரங்களை கழுவுதல் உள்ளிட்டவை தண்டனையாக வழங்கப்பட்டன.இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் அவர் அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ளார்; காலில் முறிவு ஏற்பட்டதால் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பணி செய்து வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று பொற்கோவில் வாசலில், கழுத்தில் தண்டனை குறித்த பதாகைகளை ஏந்தியபடி சுக்பிர் சிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோவிலில் நுழைந்த சீக்கியர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார்.அருகில் இருந்த பாதுகாவலர் இதை கவனித்த நிலையில், சீக்கியரின் கையை தட்டி விட்டார். இதில், அதிர்ஷ்டவசமாக சுக்பிர் சிங் உயிர் தப்பினார். இதையடுத்து, தப்பியோட முயன்ற சீக்கியரை, பொதுமக்கள் உதவியுடன் அங்கு பணியில் இருந்த போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியது, தேரா பாபா நானக்கில் வசிக்கும் முன்னாள் தீவிரவாதி நரேன் சிங் சவுரா என தெரியவந்தது. இவர், சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானின் பாபர் கல்சா அமைப்பைச் சேர்ந்தவர். இருப்பினும், சுக்பிர் சிங் மீது அவர் தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொற்கோவிலில் சுக்பிர் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு, சிரோமணி அகாலி தளம் கண்டனம் தெரிவித்துள்ளது. 'பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால், முதல்வர் பகவந்த் சிங் மான் பதவி விலக வேண்டும்' என, அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, பொற்கோவிலில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறிது நேர ஓய்வுக்கு பின், தன் சேவை தண்டனையை சுக்பிர் சிங் பாதல் தொடர்ந்தார்.

நரேன் சிங் சவுரா யார்?

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் நரேன் சிங் சவுரா, 68, பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடையவர். பலமுறை சிறை சென்ற இவர், 1984ல் நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சென்று, அங்கிருந்து இங்குள்ள பஞ்சாபிற்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள் கடத்திய வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். கடந்த 2004ல் புரைல் சிறையை உடைத்து, 104 அடிக்கு சுரங்கப்பாதை அமைத்து, அங்கிருந்த நான்கு கைதிகள் தப்பிய சம்பவத்தின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் நரேன் சிங். கடந்த 2013ல் தேசிய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர், ஐந்து ஆண்டுகளுக்கு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவர், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் பாபர் கல்சா குழுவைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி