உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் சயீபை கத்தியால் குத்திய நபர் 2 நாட்களுக்கு பின் சத்தீஸ்கரில் கைது?

நடிகர் சயீபை கத்தியால் குத்திய நபர் 2 நாட்களுக்கு பின் சத்தீஸ்கரில் கைது?

மும்பை, மஹாராஷ்டிராவில், பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை, இரு நாட்களுக்கு பின், சத்தீஸ்கரின் துர்க் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் நேற்று கைது செய்தனர். மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலி கான் வீட்டுக்குள் கடந்த 16ம் தேதி அதிகாலை புகுந்த மர்ம நபர், அவரை ஆறு முறை கத்தியால் குத்தி தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின், நடிகர் சயீப் அலிகான் உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அடுக்குமாடி குடியிருப்பை பற்றி நன்கறிந்த நபர், நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்தி தப்பி ஓடியதாகவும், அவரது வீட்டில் அந்த நபர், 30 நிமிடங்கள் வரை இருந்ததாகவும், 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். குடியிருப்பின் ஆறாவது மாடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், மர்ம நபரின் முகம் பதிவானது. இதனடிப்படையில் சந்தேகத்துக்குரிய நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும், அந்த நபரின் புகைப்படத்தை ரயில்வே போலீசாருக்கு மும்பை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மும்பையின் லோக்மான்ய திலக் முனையம் - மேற்கு வங்கத்தின் ஷாலிமார் இடையே இயங்கும் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில், சந்தேக நபர் பயணிப்பதாக, மும்பை போலீசாருக்கு நேற்று மதியம் 12:30 மணிக்கு தகவல் கிடைத்தது. அப்போது, சத்தீஸ்கரின் துர்க் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த நிலையில், அது குறித்து துர்க் ரயில்வே போலீசாருக்கு மும்பை போலீசார் தகவல் அளித்தனர். இதன்படி, துர்க் ரயில்வே ஸ்டேஷனில் சந்தேக நபரை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை முறைப்படி கைது செய்து மும்பைக்கு அழைத்து வர துர்க்குக்கு போலீசார் சென்றுள்ளனர்.இது குறித்து மும்பை போலீசார் கூறுகையில், 'ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா, 31, என்பவரை சந்தேகத்தின்படி கைது செய்துள்ளோம். உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் அவர் சந்தேக நபரே ஆவார்' என்றனர்.இதற்கிடையே நேற்று, இந்த வழக்கு தொடர்பாக, நடிகர் சயீப் அலிகானின் மனைவி கரீனா கபூர் உட்பட, 30க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் வாக்குமூலங்களை பெற்றனர்.

ஹெட்போன் வாங்கிய நபர்

நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், தாக்குதலுக்கு பின், மும்பையின் தாதர் பகுதியில் உள்ள மொபைல் போன் கடையில் 50 ரூபாய்க்கு ஹெட்போன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த போலீசார், அந்த கடையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்தனர். மேலும், பாந்த்ரா பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ