உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசி நெல்களை பயிரிடும் மாண்டியா வாலிபர்

தேசி நெல்களை பயிரிடும் மாண்டியா வாலிபர்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என தஞ்சாவூர் கூறப்படுவது போன்று, 'கர்நாடகாவின் நெற்களஞ்சியம்' என ஷிவமொக்கா மாவட்டம் அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான ரக நெல்கள் விளைவிக்கப்படுகின்றன.ஷிவமொக்காவுக்கு அடுத்தபடியாக காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் அதிக நெல் விளைவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

ரத்னா சோடி

மாண்டியா மாவட்ட வாலிபர் ஒருவர், தேசி நெல்களை பயிரிட்டு வருகிறார். இந்த நெல், இயற்கை முறையில் விளைவிக்கும் வகையை சேர்ந்தது. இதிலும் பல வகைகள் உள்ளன.தேசி இந்திராணி அரிசி, தேசி பாசுமதி அரிசி, ரத்னா சோடி, தசுமத், பஹுரூபி, சிந்தலுாரி சன்னா, காமினி போக், டில்லி பாசுமதி போன்ற நெல் வகைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

அன்னதானி

தேசி நெல்களை பயிரிட்டு வளர்க்கும் வாலிபர் சையத் கான் கூறியதாவது:என் குடும்பம் விவசாய பின்னணி கொண்டது. எனது தந்தை இரண்டு ஏக்கர் நிலத்தில் 3 ரக நெற்களை பயிரிட்டு வளர்த்தார். விவசாயத்திற்கு செயற்கை உரங்கள் தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயியை அன்னதானி என்று மக்கள் அழைக்கின்றனர்.ஆனால் செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கும் நெற்பயிர்களால் மனிதர்கள் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இதனால் விவசாயத்தில் செயற்கை உரத்தை பயன்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

நேரடி விற்பனை

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் தேசி நெற்பயிர்களை பற்றி கேள்விப்பட்டேன். ஒடிசா, மஹாராஷ்டிரா, கேரளா மாநிலங்களிலும் தேசி நெற்பயிர்களை சிலர் பயிரிட்டு வளர்ப்பது பற்றி அறிந்தேன். அந்த மாநிலங்களுக்கு சென்று ஒரு வாரம் தங்கியிருந்து தேசி நெற்பயிர்கள் குறித்து பயிற்சி பெற்றேன்.தற்போது எனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் 120 வகையிலான தேசி நெற்பயிர்களை பயிரிட்டு வளர்க்கிறேன். எனது வீட்டின் அருகே சிறிய கூடாரம் அமைத்து நெல் பன்முகத்தன்மை மையம் என்று பெயர் வைத்து அங்கு தேசி நெல்களை வைத்துள்ளேன்.இங்கு வருவோருக்கு தேசி நெல்லின் நன்மை குறித்து எடுத்துச் சொல்கிறேன். தேசி நெல்லை மாண்டியாவில் உள்ள சோலார் சென்ட்ரிங் ரைஸ் மில்லுக்கு அனுப்பி வைக்கிறேன். அங்கு அரிசியாக்கப்பட்டு நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் நிறைய நெற்பயிர்களை பயிரிட வேண்டும் என்பது என் ஆசை.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி