மாம்பழ பார்ட்டி!
தற்போது, பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த சமயத்தில், மத்திய அமைச்சர்கள் மற்றும் சில எம்.பி.,க்கள், சக எம்.பி.,க்கள், பத்திரிகையாளர் என, பலரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து விருந்து அளிப்பர். பெரும்பாலும், இது மதிய விருந்தாக இருக்கும்.முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மறைந்த அருண் ஜெட்லி ஆகியோர் இப்படி விருந்து அளித்துள்ளனர். சமீபத்தில், காங்., லோக்சபா எம்.பி., சசி தரூர் விருந்தளித்தார். இதில், வெளிநாட்டு துாதர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை, விருந்து எனக் கூறுவதை விட, 'மாம்பழ பார்ட்டி' என்றே அழைக்கலாம். ஏனெனில், வந்தவர்கள் அனைவருக்கும், மாம்பழம் மற்றும் மாம்பழ சாறு வழங்கப்பட்டது. அத்துடன், சில சிற்றுண்டிகளும் கொடுக்கப்பட்டன. காங்., தலைவர்களுக்கு சசி தரூர் அழைப்பு விடுத்திருந்தாலும், அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.மூத்த காங்., தலைவர்கள் பலரையும் இதில் காண முடியவில்லை. காங்., - எம்.பி.,க்கள் சிலர் மட்டுமே தென்பட்டனர். அதிகமாக காணப்பட்டது, பத்திரிகையாளர்கள் தான். தனக்கு சரி என, மனதில் பட்டதை சசி தரூர் பேசி வருவதால், அது காங்கிரசுக்கு பிரச்னையை கொடுத்துள்ளது. இதனால் தான், இந்த விருந்தில் காங்., மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்கவில்லையாம். பல வெளிநாட்டு துாதர்கள், உலக அரசியல் குறித்து சசி தரூரிடம் விவாதித்தனர். அனைவர் மனதிலும் இருந்த ஒரே கேள்வி,- 'சசி தரூர் காங்கிரசில் நீடிப்பாரா?' என்பதே. நம் தமிழக எம்.பி.,க்கள் இப்படி சக எம்.பி.,க்களை அழைத்து ஒருபோதும் விருந்து அளித்தது கிடையாது.***அடுத்த தலைவர் யார்?'காங்கிரசை மத்தியில் மீண்டும் ஆட்சியில் அமர வைக்க, சரியான தலைவர் ராகுல் அல்ல பிரியங்கா' என்ற பேச்சு, மீண்டும் காங்., தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே எழ ஆரம்பித்து விட்டது. இதற்கு காரணம், சமீபத்தில் பிரதமர் வீட்டு முன், 'நீட்' தொடர்பாக நடந்த போராட்டம்.பாதுகாப்பு நிறைந்த பிரதமர் வீட்டு முன், திடீரென காங்., தலைவர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டம் தான் அது. இதில், திடீரென சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார் எம்.பி., பிரியங்கா. இது, டில்லி போலீசை அதிர வைத்து விட்டது. பின், அவரை கைது செய்து வண்டியில் ஏற்ற முடியாமல் திண்டாடியது போலீஸ். ஒரு பக்கம், பெண் போலீசார் பிரியங்காவை பஸ்சுக்குள் இழுக்க, அடுத்த பக்கம், காங்., பெண் தொண்டர்கள் வெளியே இழுக்க, பிரியங்காவின் ஒரு கால் தரையிலும், இன்னொரு கால் பேருந்திலும் இருந்ததால், வண்டியை எடுக்க முடியாமல் டிரைவர் மிகவும் திண்டாடினார். ஒரு வழியாக, அவரை கைது செய்து வண்டியில் அழைத்து சென்றனர். பின், விடுவிக்கப்பட்டார்.இந்த போராட்டத்தால், பிரியங்காவின் மவுசு கூடிவிட்டது. 'எதையும் தைரியமாக கையாளுகிறார்; எது குறித்தும் கவலைப்படுவதில்லை. பார்லி.,யிலும் ராகுலை விட நன்றாக செயல்படுகிறார், பேசுகிறார். பா.ஜ.,வை எதிர்கொள்ள சரியானவர், காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரம், பிரியங்கா தான்' என, தொண்டர்களிடையே பேச்சு அடிபடுகிறது. ஆனால் சோனியாவோ, ராகுலை முன்னிறுத்த ஆசைப்பட்டு, அதையே செய்து வருகிறார். ராகுல் இருக்கும் வரை, பா.ஜ., எது குறித்தும் கவலைப்பட தேவையில்லை.***திருந்திய மாயாவதி!திரிணமுல் காங்., கட்சி இரண்டாக உடைந்து, இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டார் மம்தா பானர்ஜி. கட்சிக்குள் பிளவு உண்டாக காரணம், அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி. இதை பார்த்து பாடம் கற்றுக் கொண்டார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. தன் தம்பி மகனான ஆகாஷ் ஆனந்தை தான், தன் அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார் மாயாவதி.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில், அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், மாயாவதி கட்சியின் வேட்பாளர்களை, 'ஆகாஷ் தான் முடிவு செய்வார்' என, ஒரு செய்தி பரவி விட்டது. இதனால், கட்சி தலைவர்கள் பலரும் மாயாவதியை கண்டுகொள்ளாமல், ஆகாஷிடம் சென்றனர்.இதை பார்த்த மாயாவதி, மம்தாவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் வரக்கூடாது என முடிவு செய்து, 'உ.பி., சட்டசபை வேட்பாளர்களை நான் முடிவு செய்வேன். ஆகாஷ் வெறும் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே' என அறிவித்தார். அது மட்டுமல்லாமல், 'பொதுக்கூட்டங்களில் பேசுவது, கூட்டங்களை ஒருங்கிணைப்பது மட்டுமே ஆகாஷின் வேலை' என்றும் கறாராக சொல்லி விட்டார்.கடந்த 2022ல் நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில், ஒரே தொகுதியில் மட்டுமே வென்ற பகுஜன் சமாஜ், பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பெற்றது. 'இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும்' என, தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ள மாயாவதி, இந்த மாதத்திலேயே வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார். மாயாவதி தனித்து போட்டியிட்டால், பா.ஜ.,விற்கு லாபம். எனவே, இதை தடுத்து காங்., கூட்டணியில் மாயாவதியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ராகுல்.கருத்துக்கள் சொல்ல: dinamalar.in