உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா. அரசியலில் மெகா யு-டர்ன்! வேட்பாளர்களை வாபஸ் பெற்ற மனோஜ் ஜராங்கே

மஹா. அரசியலில் மெகா யு-டர்ன்! வேட்பாளர்களை வாபஸ் பெற்ற மனோஜ் ஜராங்கே

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பமாக அனைத்து வேட்பாளர்களையும் வாபஸ் வாங்குவதாகவும், போட்டியிடும் முடிவை கைவிடுவதாகவும் மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு குறுகிய காலமே உள்ளதால் பா.ஜ.,வின் மஹாயுதி கூட்டணியும், காங்கிரசின் மகா விகாஸ் அகாடியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன.இந்த தேர்தலில் மராத்தா சமூகத்தின் தலைவர் மனோஜ் ஜராங்கே தரப்பினர் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தனர். 10 முதல் 15 தொகுதிகளில் போட்டி என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீர் திருப்பமாக அனைத்து வேட்பாளர்களையும் வாபஸ் வாங்குவதாகவும், போட்டியிடும் முடிவை கைவிடுவதாகவும் மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி உள்ளதாவது: மிக நீண்ட யோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் நான் எந்த வேட்பாளரையும் நிறுத்தப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.மராத்தா சமூகத்தினர் சுயமாக சிந்தித்து யாருக்கு ஓட்டு போட வேண்டும், யாரை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு எடுப்பர். நான் எந்த வேட்பாளரையும், எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை.நாங்கள் அரசியலுக்கு புதியவர்கள். ஒரு சமூகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் இறங்க முடியாது. தேர்தலில் பங்கேற்று தோற்று விட்டால் மராத்தா சமூகத்துக்கு இழிவாகிவிடும். எனவே மராத்தா சமூக வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் வாங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.எனக்கு யாரிடமும் இருந்து எந்த அழுத்தமும் இல்லை. ஆனால் மராத்தா சமூகத்துக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களுக்கு ஓட்டுச்சீட்டின் மூலம் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு மனோஜ் ஜராங்கே கூறி உள்ளார். மராத்தா சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க கோரி இந்தாண்டின் தொடக்கத்தில் மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியவர். வேட்பாளர்களை திரும்ப பெற இன்றே கடைசி நாள் என்ற நிலையில் அவர் தமது சமூக வேட்பாளர்களை வாபஸ் பெறுமாறு அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ