மேரி கோ ரவுண்ட் பேட்மின்டன் கிளப் பொன் விழா விளையாட்டு போட்டிகள்
மேரி கோ ரவுண்ட் பேட்மின்டன் கிளப்பின் பொன் விழாவின் ஒரு பகுதியாக, இன்று முதல் 23ம் தேதி வரை பெங்களூரில், அகில இந்திய தங்கப் பதக்க பால் பேட்மின்டன் போட்டி நடக்கிறது.பெங்களூரில் உள்ள, 'மேரி கோ ரவுண்ட் பேட்மின்டன் கிளப்' 1968ல் துவங்கப்பட்டது. அன்றைய காலத்தில் பால் பேட்மின்டன் விளையாட்டு பிரபலமாக இருந்தது. இவ்விளையாட்டை சாலைகளிலும் கூட விளையாடி வந்தனர். அத்துடன் பல கிளப்கள், பள்ளிகளில் பல குழுக்கள் இருந்தன. 168 ஆண்டு வரலாறு
மீண்டும் பழைய பொற்கால நாட்களை கொண்டு வர, இக்கிளப்பின் பொன் விழா ஆண்டை ஒட்டி, இன்று முதல் 23ம் தேதி வரை 'அனைத்திந்திய தங்கப்பதக்கம் பால் பேட்மின்டன் போட்டி' நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இது தொடர்பாக, கிளப் தலைவர் அரசப்பா கூறியதாவது:இவ்விளையாட்டுக்கு 168 ஆண்டு வரலாறு உள்ளது. இந்தியாவிலும் கிராமம் முதல் நகரம் வரை பரவலாக இவ்விளையாட்டை விளையாடி வந்தனர். இதில் சாதித்த பலர், விளையாட்டு இடஒதுக்கீட்டில் அரசு பணி பெற்றனர். தற்போது விளையாட்டு இடஒதுக்கீட்டில் பணி பெறுவோர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வே துறை, கனரா வங்கியில் மட்டுமே வேலை கிடைத்து வருகிறது. இது தவிர, வேறு எந்த சலுகையும் இல்லை. பலரும் கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டுவதாலும், பால் பேட்மின்டன் விளையாட்டு மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இப்போட்டியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை.இந்த விளையாட்டு போட்டி, 2020லேயே நடத்தி இருக்க வேண்டும். அந்நேரத்தில் கொரோனா தாக்கம் இருந்ததால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பொன் விழா கொண்டாடப்பட உள்ளது. 4 தங்கப்பதக்கம்
இன்று முதல் 23ம் தேதி வரை பெங்களூரு ஜே.பி., நகர் ஏழாவது பேசில் உள்ள ஆர்.பி.ஐ., மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது. இதில், கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த, 20 ஆண்கள், ஒன்பது பெண்கள் பங்கேற்கின்றனர். இதன் மூலம் அழிந்து வரும் பால் பேட்மின்டன் போட்டியை உயிர்ப்பிக்க முடியும்.முதன் முறையாக முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அனைவருக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. பங்கேற்கும் அணியினர், நான்கு குழுவாக பிரிக்கப்படுவர். 'லீக்' மற்றும், 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார் -- நமது நிருபர் -.