மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை: சி.பி.ஐ., தகவல்
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டரை, போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய சஞ்சய் ராய் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக, குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரியில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். விசாரணை
நாடு முழுதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய கோல்கட்டா மருத்துவ மாணவி பலாத்கார சம்பவத்தில், போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், சம்பவம் நடந்த போது மருத்துவக் கல்லுாரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.வழக்கின் விசாரணையை இரு மாதங்களுக்குள் முடித்த சி.பி.ஐ., கோல்கட்டாவில் உள்ள கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நேற்று பிற்பகல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.அதில், பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டரை, போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய சஞ்சய் ராய் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது. குற்றப்பத்திரிகை
மேலும், டாக்டர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில், 200 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சி.பி.ஐ., தெரிவித்து உள்ளது. மேலும், இந்த சம்பவம் கூட்டு பலாத்காரமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்
பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டும், பணியிடத்தில் பாதுகாப்பு வழங்கக் கோரியும், பயிற்சி டாக்டர்கள் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. 'எங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்' என, பயிற்சி டாக்டர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க, மூத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.