கட்டணம் உயர்வை கைவிட்டது மெட்ரோ
பெங்களூரு; மெட்ரோ ரயிலின் பயண கட்டணம் உயர்த்த, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே கட்டண உயர்வு முடிவை, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.கர்நாடகாவில் நான்கு போக்குவரத்து கழக பஸ்களின் டிக்கெட் கட்டணம், புத்தாண்டு துவக்கத்தில் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்துக்கும் அரசு பணியவில்லை.பஸ் கட்டணத்தை தொடர்ந்து மெட்ரோ ரயில் பயண கட்டணத்தை உயர்த்த, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் முடிவு செய்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.பிப்ரவரி 1 முதல் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த முடிவு செய்திருந்தது. பயணியரிடம் கருத்து கேட்டது, கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனாலும், மெட்ரோ நிறுவனம், நிர்வகிப்பு செலவுகள் அதிகரிப்பதை காரணம் காட்டி, பயண கட்டணத்தை உயர்த்த தயாராகி வந்தது.மெட்ரோ ரயில் நிறுவனம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், பயண கட்டண உயர்வுக்கு, மத்திய அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிறுவனம் ஒப்புதல் கோரியது. இது குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டது. அறிக்கை தாக்கல் செய்ய மெட்ரோ நிறுவனம் கால அவகாசம் கேட்டது.இதற்கிடையே மத்திய அரசு, 'ஏற்கனவே பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் கட்டணத்தை அதிகரித்தால், மக்களுக்கு சுமை அதிகரிக்கும்' என கருத்து தெரிவித்து, கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது.எனவே மெட்ரோ நிறுவனம், தன் முடிவை தற்காலிகமாக நிறுத்திஉள்ளது.