கோலார் : ''குடிநீர் பிரச்னை தீர்வுக்கு நோடல் அதிகாரிகள் நியமிக்கப்படும்,'' என்று நகர வளர்ச்சி துறை மற்றும் கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பைரதி சுரேஷ் தெரிவித்தார்.கோலார் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், ஜில்லா பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடந்தது.அமைச்சர் பைரதி சுரேஷ் பேசியதாவது:வறட்சி பணிகள் குறித்து கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உரிய தீர்வுகாண வேண்டும்.கோலார் மாவட்டத்தில் ஆறு தாலுகாக்களிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப நிவாரண நிதியும் கர்நாடக அரசு வழங்கி உள்ளது. எந்த கிராமத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். விவாதம்
இதை தொடர்ந்து நடந்த விவாதம்:கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா: இதுவரை கோலார் மாவட்டத்தில் குடிநீர் பாதிப்பு ஏற்படவில்லை. கிராமங்களில் 493, நகர பகுதிகளில் 212 போர்வெல்களை சீர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எரகோள் அணையில் இருந்து பங்கார்பேட்டை, கோலார் தாலுகாக்களில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.ம.ஜ.த., - எம்.எல்.சி., கோவிந்தராஜ்: நகர பேட்டை சாமனஹள்ளி வார்டில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையருக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தால் உடனடியாக கவனிப்பதில்லை. நகருக்கு எரகோள் குடிநீர் வழங்கப்பட்டால் எப்படி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட போகிறது.மாவட்ட கலெக்டர்: கோலார் நகரில் ஏழு மேல் நிலைத் தொட்டிகள் கட்டப் பட்டு வருகிறது இதில் இன்னும் இரண்டு மேல் நிலை தொட்டிகள் தான் கட்டப்பட வேண்டியுள்ளது. பெரும்பாலான வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க 'ஹெல்ப் லைன்' அமைக்க பட்டுள்ளது. பயனற்ற ஆன் லைன்
ம.ஜ.த., - எம்.எல்.சி.,: ஹெல்ப் லைன், ஆன்லைனில் எதற்கும் பயன் கிடைப்பது இல்லை. அமைச்சர் பைரதி சுரேஷ்: ஆன்லைன், ஹெல்ப் லைன் எதுவுமே வேண்டாம். நோடல் அதிகாரிகள் நியமிக்கப் படுவர். அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பணியாற்ற வேண்டும்.மாலுார் காங்., - எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா: மாலுாரில் எரகோள் குடிநீருக்கு பைப் லைன் பதிக்கும் வேலை மெத்தனமாக நடந்து வருகிறது. இப்பணி எப்போது தான் முடிவடைய போகுதோ. இதன் பணியை வேகமாக செய்ய வேண்டும். மாலூருக்கும் எரகோள் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் வெங்கட் ஷிவா ரெட்டி, சம்ருத்தி மஞ்சுநாத், ஜில்லா பஞ்சாயத்து தலைமை அதிகாரி பத்மா பசந்தப்பா, போலீஸ் எஸ்.பி.,கள் நாராயணா, சாந்தராஜு உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.ரூ.14 கோடி நிதி உதவிகூட்டத்திற்கு பின் அமைச்சர் அளித்த பேட்டி:மருத்துவம், கல்வி துறைகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறைக்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையில் பணியாற்று வதாக புகார்கள் வந்துள்ளன. இது போன்றவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு சி.எஸ்.ஆர்., திட்ட நிதியை பயன்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.