மேலும் செய்திகள்
'ஜொள்ளுங்க... மேடம்!'
18-Mar-2025
புதுச்சேரி:''புதுச்சேரியில் உப்புதன்மை அதிகரித்துள்ள சூழ்நிலையில், தமிழ் புத்தாண்டு முதல் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வீடுதோறும் இலவசமாக வழங்கப்படும்,'' என, அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் நேற்றைய கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அனிபால் கென்னடி பேசுகையில், ''புதுச்சேரி நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் தரம் இல்லை. டி.டி.எஸ்., அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த குடிநீரை குடித்தால், மக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும்,'' என பேசினர். அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதிலளிக்கையில், ''குடிநீருக்காக, நிலத்தடி நீரையே பெரிதும் நம்பியுள்ளோம். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நீரில் உவர்ப்பு தன்மை அதிகரித்துள்ளது. இதை போக்க, உவர்ப்பு தன்மை அதிகம் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் நீர், அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் நீர், இரண்டையும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் கலந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது,'' என்றார்.அதற்கு நேரு எம்.எல்.ஏ., எதிர்ப்பு தெரிவித்தார். ''நகர பகுதியில் குடிநீர் குடிக்க உகந்ததாக இல்லை. அதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்,'' என குற்றம்சாட்டினார். இதையடுத்து அமைச்சர் லட்சுமி நாராயணன், ''குடிநீர் பாதித்துள்ள நகர பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, தினசரி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன், இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் வரும் தமிழ் புத்தாண்டில் துவங்கப்படும்,'' என்றார்.
18-Mar-2025