உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வார்டு பொறுப்பாளராக அமைச்சர்கள் நியமனம் 10 வார்டுகளை கைப்பற்ற பா.ஜ., இலக்கு

வார்டு பொறுப்பாளராக அமைச்சர்கள் நியமனம் 10 வார்டுகளை கைப்பற்ற பா.ஜ., இலக்கு

புதுடில்லி: டில்லி மாநகராட்சியில் 12 வார்டுகளுக்கு நடக்கவுள்ள இடைத்தேர்தலுக்கு பா.ஜ., முழுவீச்சில் தயாராகி வருகிறது. பத்து வார்டுகளையாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இரண்டு வார்டு களுக்கு ஒரு அமைச்சர் என, 12 வார்டுகளுக்கும் ஆறு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். டில்லி மாநகராட்சியில் காலியாக உள்ள முண்ட்கா, ஷாலிமர்பாக் - -பி, அசோக் விஹார், சாந்தினி சவுக், சாந்தினி மஹால், துவாரகா - -பி, டிச்சான் கலன், நரைனா, சங்கம் விஹார் - -ஏ, தக் ஷின்புரி, கிரேட்டர் கைலாஷ் மற்றும் வினோத் நகர் ஆகிய 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடக்கிறது. ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப் படுகிறது. ஆலோசனை இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே தேர்தல் பணிகளை பா.ஜ., துவக்கி விட்டது. மொத்தம் உள்ள 12 வார்டுகளில் 10 வார்டுகளையாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.,வினர் மும்முரமாக இருக்கின்றனர். தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளர்களை டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா நியமித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட வார்டு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இடைத்தேர்தல் நடக்கும் 12 வார்டுகளின் வேட்பாளர்கள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொறுப்பாளர்கள் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, முண்ட்கா மற்றும் அசோக் விஹார் ஆகிய இரண்டு வார்டுகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஷாலிமர் பாக் மற்றும் வினோத் நகர் - கலாசாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, சாந்தினி மஹால் மற்றும் சாந்தினி சவுக் - சமூக நலத்துறை அமைச்சர் ரவீந்திர இந்திரஜ் சிங், துவாரகா - பி மற்றும் டிச்சான் கலன் - சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் சிங், நரைனா மற்றும் கிரேட்டர் கைலாஷ் - கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், தக் ஷின்புரி மற்றும் சங்கம் விஹார் - ஏ - பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆகியோர் பொறுப்பாளர்களாக் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் நவ. 3ல் துவங்கி 10ல் நிறைவடைகிறது. நவ. 12ல் பரிசீலனை நடக்கிறது. நவ. 15ல் மனுவை வாபஸ் பெறலாம். நவ., 30ல் ஓட்டுப்பதிவும் டிச., 3ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !