கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கு அமைச்சர் ஆதரவாளருக்கு ஜாமின்
பீதர்: கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை வழக்கில், அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவாளர் உட்பட 5 பேருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.பீதர் பால்கி கட்டுங்கவ் கிராமத்தில் வசித்தவர் சச்சின் மோனப்பா பாஞ்சா, 26. கடந்த டிசம்பர் 26 ம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவாளர் ராஜு கப்பனுார், அவரது கூட்டாளிகள் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.டி.எஸ்.பி., சுலைமான் தாசில்தார் தலைமையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், ராஜு கப்பனுார், அவரது கூட்டாளிகள் எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் ராஜு கப்பனுார், அவரது கூட்டாளிகளான நந்தகுமார், கோரக்நாத், சதீஷ், ராம கவுடா ஆகியோர் ஜாமின் கேட்டு, பீதர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 5 பேருக்கும் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமின் விதித்து உத்தரவிட்டது. 'வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; சாட்சிகளை மிரட்டும் முயற்சியில் ஈடுபடக்கூடாது; பிணைய தொகையாக 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.