பிர்பும்: மேற்கு வங்கத்தில், வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு வந்ததை அடுத்து, சுவர் ஏறி தப்பிச் செல்ல முயன்ற திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., ஜிபன் கிருஷ்ண சாஹா கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, பிர்பும் மாவட்டத்தில் உள்ள புர்வான் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஜிபன் கிருஷ்ண சாஹா. இம்மாநிலத்தில், 2023ல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் ஊழல் நடந்தது தெரியவந்ததை அடுத்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், திரிணமுல் கட்சியைச் சேர்ந்த பலர், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023ல், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜிபன் கிருஷ்ண சாஹா, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில், பிர்பும் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம், லஞ்சம் வாங்கியதாக மேலும் ஒரு வழக்கு ஜிபன் மீது பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, முர்ஷிதாபாதில் உள்ள அவரின் வீட்டுக்கு அமலாக்கத் துறையினர் நேற்று சென்றனர். ஜிபன் மனைவியிடம் விசாரணை நடத்திய நிலையில், வீட்டை சோதனையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வீட்டில் பதுங்கியிருந்த ஜிபன், பின்பக்க தோட்டம் வழியாக சென்று, மதில் சுவர் ஏறி தப்பிச் செல்ல முயன்றார். அவரை விரட்டிச் சென்ற அதிகாரிகள், போலீசார் உதவியுடன் கைது செய்தனர். ஆசிரியர் நியமன ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக, அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.