உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., தேசிய செயற்குழு: மோடி புறக்கணிப்பு

பா.ஜ., தேசிய செயற்குழு: மோடி புறக்கணிப்பு

புதுடில்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் இன்று துவங்குகிறது. இந்தக் கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியுடன் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு காரணமாகவே, அவர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.ஊழலுக்கு எதிராக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அடுத்த மாதம் ரத யாத்திரை நடத்துகிறார். இந்த யாத்திரையை, குஜராத்தில் சர்தார் படேல் பிறந்த இடமான கரம்சாத்தில் இருந்து துவக்க அவர் திட்டமிட்டதாகவும், ஆனால், யாத்திரைக்கு முதல்வர் நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்ததால், பீகார் மாநிலத்தில் இருந்து துவக்குகிறார் என்றும் செய்திகள் வெளியாகின. தான் முதல்வராக உள்ள குஜராத்தில், அத்வானியை முன்னிலைப்படுத்த மோடி விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ரத யாத்திரை நடத்துவது தேவையற்றது மற்றும் பொருத்தமற்றது என, அத்வானியிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் இன்று துவங்குகிறது. இந்தக் கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. நவராத்திரி விழாவையொட்டி, மோடி ஒன்பது நாட்கள் விரதம் இருப்பதால், அவர் டில்லிக்கு வரவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே, மோடி இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என, சில தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பா.ஜ., தலைவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை.இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, ''நாங்கள் மோடியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் வழக்கமாக செயற்குழு கூட்டங்களுக்கு வந்து விடுவார். ஆனால், நவராத்திரி காரணமாக இம்முறை அவர் பங்கேற்பதில், சில பிரச்னைகள் உள்ளன,'' என்றார். அத்வானியின் ரத யாத்திரை தொடர்பாக நேற்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி மேலும் கூறியதாவது: பிரதமர் பதவிக்கு அத்வானி ஆசைப்படவில்லை. இதை அவரே, 'பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை' எனக் கூறி, தெளிவுபடுத்தியுள்ளார். ஊழலுக்கு எதிராக அத்வானி நடத்தவுள்ள யாத்திரையை, பீகார் மாநிலம் சீதாப்தியாராவில், அக்டோபர் 11ம் தேதி, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் துவக்கி வைக்கிறார். இந்த யாத்திரை, பிரதமர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படவில்லை. பரிசுத்தமான அரசியல் மற்றும் நல்லாட்சியை வலியுறுத்தி நடத்தப்படுகிறது. அத்வானியின் யாத்திரைக்கு, பா.ஜ., கட்சி முழு ஆதரவு அளிக்கும். யாத்திரை வெற்றி பெற உதவும். இந்த யாத்திரையின் போது, குஜராத் மாநிலத்திற்கும் அவர் செல்வார். அதன் மூலம், அத்வானியின் யாத்திரையை நரேந்திர மோடி எதிர்க்கிறார் என வெளியான செய்திகளை, தவறு என நிரூபிப்பார். யாத்திரை, 18 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாகச் செல்லும். அத்வானி, குஜராத்தின் காந்தி நகர் தொகுதி எம்.பி., என்பதால், அந்த மாநிலத்தில் அவரது யாத்திரை மூன்று நாட்கள் நடக்கும். யாத்திரை, நவம்பர் 20ம் தேதி டில்லியில் நிறைவடையும். இவ்வாறு கட்காரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி