விமான விபத்து இடத்தை பார்வையிட்டார் மோடி கற்பனை செய்ய முடியாத துயரம் என வேதனை
ஆமதாபாத்: ஆமதாபாதில் விமான விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார் மற்றும் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனுக்கு, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின், 'போயிங் 787 - ட்ரீம்லைனர்' விமானம் நேற்று முன்தினம் மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. 800 அடி உயரம் மட்டுமே பறந்த விமானம், அடுத்த சில நிமிடங்களில், அருகே உள்ள பி.ஜே., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. அதிர்ச்சி
இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, 241 பேர் பலியாகினர். இதில், பா.ஜ., முத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானியும் அடங்குவார். விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லுாரி கட்டடத்தின் மேல் தளத்தில் இயங்கி வந்த கேன்டீனில், சாப்பிட்டுக் கொண்டிருந்த டாக்டர் உள்ளிட்ட ஐந்து மருத்துவ மாணவர்களும், விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர். மொத்தம், 265 பேரை காவு வாங்கிய இந்த விபத்து, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் பார்வையிட்டார். ஆமதாபாதின் சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து நேராக விபத்து நடந்த மேகனி நகருக்கு காரில் சென்றார். பிரதமருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சென்றார். பி.ஜே., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில், 20 நிமிடங்களுக்கு மேலாக பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார். விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மற்றும் குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் பிரதமரிடம் விபத்து குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் பற்றியும் விளக்கினர். அங்கிருந்து புறப்பட்ட மோடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஷ்வாஸ் குமாரை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும், 50க்கும் மேற்பட்டோரையும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களையும் அவர் சந்தித்து பேசினார். ஆறுதல்
இதைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, 'விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டேன்.பேரழிவு நடந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.'அயராது உழைக்கும் அதிகாரிகளை சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத துயரத்தில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. துயரமடைந்த அனைத்து குடும்பங்களுக்கும் இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.
'இறந்துவிட்டேன் என்றே நினைத்தேன்'
விமான விபத்தில் உயிர் தப்பிய, குஜராத் அருகே உள்ள கடலோர நகரமான டையூவைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார், அவசரகால கதவுக்கு அருகில் இருந்த '11 ஏ' என்ற இருக்கையில் அமர்ந்திருந்தார். விபத்து ஏற்பட்டவுடன், அவசரகால கதவு உடைந்து விழுந்தது. இதனால், அவரால் உயிர் பிழைக்க முடிந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க விவரித்தார். அவர் கூறியதாவது:விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், விமானம் மேலெழும்புவதில் தடுமாற்றம் இருப்பதை உணர முடிந்தது. விமானத்தில் இருந்த ஆபத்துக்கான பச்சை, வெள்ளை விளக்குகள் எரிந்தன. விமானத்தை உயரே பறக்க வைக்க விமானிகள் முயன்றனர். ஆனால், அடுத்த சில நிமிடத்தில் கட்டடம் ஒன்றில் விமானம் மோதியது. இறந்துவிட்டேன் என நினைத்தேன். கண் திறந்து பார்த்த போது, அருகில் இருந்த அவசரகால கதவு திறந்து வெளிச்சம் தெரிந்தது. விமானத்தில் நான் அமர்ந்திருந்த பகுதி தரைத்தளத்தை ஒட்டி விழுந்திருந்தது. அதை உணர்ந்த அடுத்த நிமிடமே, விமானத்தில் பற்றிய தீ, என் கையை சுட்டது. இதனால், என் இடது கை எரிந்தது. சட்டென சுதாரித்த நான், 'சீட்' பெல்டு களை கழற்றிவிட்டு அவசரமாக வெளியேறினேன். வெளியே வந்த என்னை, ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனை அழைத்து வந்தனர்.என் கண்ணெதிரிலேயே, விமானப் பணிப்பெண்கள் மற்றும் பிற பயணியர் தீயில் கருகியது கொடூரமானது. இதில், நான் எப்படி உயிர் பிழைத்து வந்தேன் என்பதே தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்ஷ்ட பெண்
பிரிட்டனைச் சேர்ந்த பூமி சவுகான் என்ற பெண், விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், அவரால் சரியான நேரத்துக்கு விமான நிலையம் வர முடியவில்லை. 10 நிமிடங்கள் தாமதமாக வந்த பூமி, லண்டன் சென்ற விமானத்தை தவறவிட்டார். இதனால், கோர விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இது குறித்து அவர் கூறுகையில், “விடுமுறைக்காக இந்தியா வந்த நான், நேற்றைய விமானத்தில் பயணிக்க இருந்தேன். விபத்து பற்றி அறிந்ததும் எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தை தவறவிட்டதால் உயிர் பிழைத்தேன். கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்,” என்றார்.
6 உடல்கள் ஒப்படைப்பு
விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் முகம் தீயில் சேதம் அடையாமல் இருந்ததால், அடையாளம் காண்பது எளிதாக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பெரும்பாலானோரின் உடல்கள் கருகியதால், அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடல்களின் டி.என்.ஏ., பரிசோதனை முடிவுகள் வெளியாக மூன்று நாட்கள் ஆகும் என்பதால், அதன் பின்னரே எஞ்சியவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.