மேலும் செய்திகள்
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
10-Nov-2025
காமெங்: பனி சூழ்ந்த உயர்ந்த மலைச்சிகரங்களில் இருக்கும் போர்க்களங்களில் தங்கு தடையின்றி உணவுப் பொருட்கள், ஆயுதங்களை எடுத்துச் செல்லவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், நம் ராணுவம், 'மோனோ' ரயில் போக்குவரத்தை துவங்கி இருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில், இமயமலையை ஒட்டிய காமெங் செக்டார் மலைப் பகுதிகளில், இரவு, பகலாக நம் ராணுவ வீரர் எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடை பயணம் சீனாவை ஒட்டி கடல் மட்டத்தில் இருந்து, 16,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த போர்க்களத்தில் பொருட்களை கொண்டு செல்வது அவ்வளவு எளிதல்ல. அதிலும் பனிக்காலங்களில் மலை முழுதும் சூழும் பனி, இயற்கை பேரிடர்கள் ஆகியவை ராணுவத்துக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன. இதனால், மலை அடிவாரத்தில் இருந்து உச்சியில் உள்ள வீரர்களுக்கு கடும் பனிப்பொழிவில் நடை பயணமாகவே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த வகையில் மனித ஆற்றலும், நேரமும் விரயமானது. தவிர, இயற்கை பேரிடர் காலங்களில் அடிவார முகாமில் இருந்து உச்சியில் உள்ள போர்க் களத்திற்கு எந்த பொருளையும் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நம் ராணுவத்தின், 'கஜராஜ் கார்ப்ஸ்' படைப் பிரிவு, 'மோனோ' ரயில் போக்குவரத்தை உருவாக்கியுள்ளது. இரவு, பகல், மழை, வெயில் என மோசமான வானிலை குறுக்கிட்டாலும் இந்த ரயில் போக்குவரத்து நிற்காது. இதன் மூலம் வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதற்காக அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை தண்டவாளம் அமைக்கப்பட்டு, ராணுவத்துக்கான, 'மோனோ' ரயில் போக்குவரத்து சேவை துவங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும், 300 கிலோ எடை வரை இதில் எடுத்து செல்ல முடியும். ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத இடங்களில் விபத்துகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அடிவார முகாமுக்கு அழைத்து வர இந்த, 'மோனோ' ரயில் போக்குவரத்து பெரிதும் உதவும். பருவநிலை மோசமாக இருக்கும் காலத்திலும், தங்குதடையின்றி பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில், நம் ராணுவத்தின் முயற்சியால், உள்நாட்டிலேயே இந்த, 'மோனோ' ரயில் போக்குவரத்து முறை அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. 'மோனோ' ரயில் நகரங்களில், குறைந்த துார மக்கள் பயணத்துக்கு, 'மோனோ' ரயில் சேவை பயன்படுத்தப் படுகிறது. வழக்கமான ரயிலை போன்று இரு தண்டவாளங்கள் இல்லாமல், அகலமான இரும்புக் கம்பியின் இரு பக்கங்களையும் இறுகபற்றியபடி, ஒற்றை தண்ட வாளத்தில் இந்த ரயில் பயணிக்கும். மஹாராஷ்டிராவின் மும்பையில் இந்த சேவை தற்போது நடைமுறையில் உள்ளது.
10-Nov-2025