மைசூரில் கூடுதலாக இந்திரா உணவகங்கள்
மைசூரு: மைசூரில் புதிதாக ஒன்பது இடங்களில், இந்திரா உணவகங்கள் திறக்கப்படுகின்றன. கட்டட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஏழைகளுக்கு குறைந்த விலையில், உணவு வழங்கும் நோக்கில் மாநில அரசு, இந்திரா உணவகம் திட்டத்தை செயல்படுத்தியது. இது முதல்வர் சித்தராமையாவின் கனவு திட்டமாகும். 2016ல் முதற்கட்டமாக பெங்களூரில் உணவகங்கள் திறக்கப்பட்டன. அதன்பின் மற்ற மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டன. இந்த உணவகங்களில் காலை உணவு ஐந்து ரூபாய்க்கும், மதியம், இரவு உணவு 10 ரூபாய்க்கும் கிடைக்கிறது.மைசூரிலும் இந்திரா உணவகங்கள் திறக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் ஏற்கனவே 17 இந்திரா உணவகங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன. தற்போது புதிதாக ஒன்பது இடங்களில் உணவகங்கள் திறக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மைசூரு மாவட்ட கலெக்டர் காந்தரெட்டி கூறியதாவது:கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், 600க்கும் மேற்பட்ட இந்திரா உணவகங்கள் செயல்படுகின்றன. மைசூரில் 17 உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 12 உணவகங்கள் நகரின் மைய பகுதியிலேயே உள்ளன. ஏழைகள், தொழிலாளர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன.மைசூரில் மேலும் ஒன்பது இடங்களில், உணவகம் திறக்கப்படும். கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. படுவாரஹள்ளியின், மஹாராணி வர்த்தக கல்லுாரி வளாகம், சித்தார்த் நகரில் உள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், விரைவில் இந்திரா உணவகங்கள் செயல்படவுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.