உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு மிரட்டல்

ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு மிரட்டல்

புதுடில்லி : விமான நிறுவன அதிகாரிகளுடன், மத்திய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு பேச்சு நடத்திய நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விமானங்களுக்கு சமீபகாலமாக அதிகரித்து வரும் வெடிகுண்டு மிரட்டலால், பயணியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தொலைபேசி, இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்து வந்த நபர்கள், சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக மிரட்டல் விடுக்கின்றனர்.

நடவடிக்கை

விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர் மிரட்டலை அடுத்து, உள்ளூர் மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களின் உரிமையாளர்கள், விமானப் போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள், தேசிய புலனாய்வு குழு மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு சமீபத்தில் பேச்சு நடத்தினார். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்த பின்னும், வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்கின்றன. இந்நிலையில், 'இண்டிகோ, ஆகாசா ஏர், விஸ்தாரா, ஸ்டார் ஏர்' உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் சி.இ.ஓ., அதிகாரிகளுடன் மத்திய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர். அச்சுறுத்தல்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்போது வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில், 'இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா ஏர் மற்றும் ஏர் இந்தியா' ஆகிய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான தலா ஆறு விமானங்களுக்கு, நேற்று ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டில்லி, மும்பை, கொச்சி, லக்னோ, ஆமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு புறப்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் உரிய சோதனை நடத்தினர். விமானங்கள், விமான நிலையங்களில் இருந்த பயணியரும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இறுதியில், மிரட்டல் அனைத்தும் புரளி என தெரியவந்தது.

எச்சரிக்கை

இதற்கிடையே, கர்நாடகாவின் பெலகாவியை அடுத்த சாம்ப்ரா விமான நிலையத்துக்கு இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்த மர்ம நபர், சென்னை - பெலகாவி விமானத்தை வெடிகுண்டு வாயிலாக தகர்க்க போவதாக எச்சரித்து இருந்தார். இதையடுத்து, விமான நிலையம் முழுதும் நேற்று சோதனை செய்யப்பட்டது. இறுதியில், அது புரளி என தெரியவந்ததை அடுத்து, விமான நிலைய இயக்குனர் தரப்பில் பெலகாவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை